சிரியா அமைதிப் பேச்சுவார்த்தைக்கு கிளர்ச்சியாளர்கள் தரப்பிலிருந்து யார் யாரை அழைப்பது என்பதில் கருத்து வேறுபாடு நீடிப்பதால், அந்தப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஜெனீவாவில் இந்த மாதம் 25-ஆம் தேதி நடைபெறுவதாக உள்ள சிரியா அமைதிப் பேச்சுவார்த்தையில், அரசுக்கு எதிரான தரப்பில் யார் யார் பங்கேற்கலாம் என்பதை முடிவு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.
அந்தப் பேச்சுவார்த்தைக்கான முயற்சியை மேற்கொண்டுள்ள அமெரிக்கா, ரஷியா, சவூதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட 17 நாடுகளுக்கிடையே இந்த விவகாரத்தில் கருத்து வேறுபாடு நீடித்து வருகிறது.
எனவே அமைதிப் பேச்சுவார்தை தொடங்குவதில் தாமதம் ஏற்படலாம் என்றார் அவர்.