காசாவில் பட்டினியால் 17 வயது இளைஞன் 70 கிலோவில் இருந்து 25 கிலோவாக குறைந்து உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலின் தொடர் முற்றுகையால் காசாவில் மக்கள் உணவுக்காக மிகவும் போராடிக் கொண்டிருக்கின்னர்.
இந்நிலையில், இளைஞன் அத்தீப் அபு காத்திர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்ததாக அவரது உறவினர்களும் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
காசா நகரில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனை வட்டாரங்கள் அல் ஜசீரா செய்தி நிறுவனத்திடம் அளித்த தகவலின்படி, அத்தீப் அபு காத்திர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்தார்.
இறக்கும் போது, அவரது எடை 70 கிலோவிலிருந்து வெறும் 25 கிலோவாக குறைந்துவிட்டது என்று அவரது குடும்பத்தினர் கூறினர். இது தோராயமாக ஒரு ஒன்பது வயது குழந்தையின் எடைக்குச் சமமாகும்.
அவர் ஒரு காலத்தில் உள்ளூர் விளையாட்டு வீரராக இருந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்களும், அவரை அறிந்தவர்களும் கூறுகிறார்கள்.
“ஊட்டச்சத்து குறைபாட்டால் உடல் எடை குறைந்து, இறுதியில் அவர் உயிரிழந்துவிட்டார்” என்றும் அவரின் உறவினர்கள் குறினர்.
இளைஞன் அத்தீப் அபு காத்தரின் மரணம், காசாவில் அதிகரித்து வரும் துயரத்தின் ஒரு பகுதியாகும்.
அல்-ஷிஃபா மருத்துவமனையின் இயக்குனர், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் குறைந்தது ஏழு பாலஸ்தீனியர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார்.
காசா சுகாதார அமைச்சகத்தின் சமீபத்திய தரவுகளின்படி, ஒக்டோபர் 2023 இல் போர் தொடங்கியதிலிருந்து இதுவரை குறைந்தது 169 பாலஸ்தீனியர்கள், இதில் 93 குழந்தைகள் உட்பட, பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் உயிரிழந்தனர்.
இந்தப் புள்ளிவிவரங்கள், முற்றுகையிடப்பட்ட பகுதியில் உருவாகி வரும் கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்றன.