14
கொலைக் கருவிகளோடு
குரூரமாய்
வெறி கொண்டலையும்
மரணக் கூலிகளே…!
உங்களிடம் தான்
இந்த உரையாடல்…
சற்று நில்லுங்கள்..
சற்று யோசியுங்கள்..
உதிரம்
சிந்துவதால்
உங்கள் கனவு
நிஜமாகுமா..?
உலகம்
சிதைந்து போவதால்
உங்கள் வன்மம்
தீருமா..?
அன்பு, கருணை, அகிம்சை
என்பது
வாழ்வின்
வேதம் …
ஆனால்_
அரிவாள்கள் ஏந்தி
ஆடு வெட்டுபவர்களாய்
மனிதர்களை வெட்டிட
அலைகிறீர்களே…!
ஆன்மீகம், மனிதநேசம் என
ஆயிரம் சித்தாந்தங்களை
அனுதினமும்
கோஷிக்கிறது
நேசத்தின் பெரும் வாழ்வு
ஆனால்_
சக உயிர்கள் மீது
ஏன்…? நீங்கள்…
சிநேகம் கொள்ள மறுக்கிறீர்கள்.
உரையாடலை
புறக்கணித்து விட்டு
யுத்தம் செய்திட
நீங்கள் முனைகையில்..
உடுக்கை ஒலித்து
ருத்திரர்களாய்
கிளம்பாமல்..
ஒரு போதும் மனிதம்
பிரார்த்தனைகளை
உருப்போடாது
உக்கிரமான புயலாய்
வீறு கொண்டெழும்…
உங்களின்
ஆயுத சித்தாந்தங்களை
உருத் தெரியாமல்
துடைத்தெறியும்…
அழிவு விரும்பிகளே…!
சற்று நில்லுங்கள்..
சற்று யோசியுங்கள்..
உலக நேசமே
இக வாழ்வு முறை
மனிதப் பரிணாமமே
உயிர்ப்பின் நடை முறை.
வசந்ததீபன்