இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தமது நிறுவன ஊடகவியலாளர்கள் நால்வர் காஸாவில் கொல்லப்பட்டனர் என Al Jazeera செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் உலகளவில் மிகவும் பிரபல்ய ஊடகவியலாளரான 28 வயதுடைய அனஸ் அல் ஷெரீ`ஃப் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதேவேளை, அவரை ஹமாஸ் பிரிவின் தலைவர் என்று இஸ்ரேலிய இராணுவம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இஸ்ரேலிய மக்களையும் இஸ்ரேலின் தற்காப்புப் படையையும் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தும் ஹமாஸுக்கு அவர் பொறுப்பு என்றும் இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
உளவுத் தகவல் வாயிலாகவும் காஸாவில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலும் இது கண்டுபிடிக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது.
இந்நிலையில், அல் ஷெரீ`ஃப்பின் உயிருக்கு ஆபத்து இருந்ததாக ஏற்கெனவே சொல்லப்பட்டது.
காஸாவுக்காகக் குரல் கொடுப்பதை நிறுத்தவே இஸ்ரேல் அவரைக் கொன்றதாக Al Jazeera குற்றஞ்சாட்டியுள்ளது.
அவர் ஹமாஸைச் சேர்ந்தவர் என்ற இஸ்ரேலின் கூற்றுக்குத் தகுந்த ஆதாரம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
கொல்லப்பட்ட ஏனைய ஊடகவியலாளர்கள் முகமது க்ரீகே, இப்ராஹிம் ஜாஹர் மற்றும் முகமது நௌஃபல் என்று Al Jazeera தகவல் வெளியிட்டுள்ளது.
இதேவேளை, போர் தொடங்கிய கடந்த 2023 முதல் காசாவில் 238 ஊடகவியலாளர்களை இஸ்ரேல் இராணுவம் கொன்றுள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
ஊடகவியலாளர்களுக்கான சுதந்திரத்தை முடக்கும் வகையில் இஸ்ரேல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக காசா பத்திரிகையாளர் சங்கம் மற்றும் சர்வதேச பத்திரிகையாளர் அமைப்புகள் இந்தக் கொலைகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
