செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home செய்திகள் இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

இலங்கையை வீழ்த்தி ஆசிய சம்பியனான இந்தியா பதக்கங்களையோ கிண்ணத்தையோ வாங்கவில்லை

2 minutes read

துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு  நடைபெற்ற மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் இலங்கையை 72 ஓட்டங்களால் வெற்றிகொண்டு இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.

இலங்கை வீராங்கனைகள் தங்களுக்கான பதக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

ஆனால், பாகிஸ்தானின் சிரேஷ்ட அமைச்சரும் ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவருமான மோஹ்சின் நக்வி அங்கு இருந்ததால் இந்திய மகளிர் அணியினர் தங்களது பதக்கங்களையோ ஆசிய கிண்ணத்தையோ பெற்றுக்கொள்ளவில்லை.

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் நான்காவது தடவையாக சம்பியனான இந்தியா, இருவகை (50 ஓவர், ரி20) மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் எட்டாவது தடவையாக சம்பியனானது.

எவ்வாறாயினும், ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற ஆடவர் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியினர் எவ்வாறு பதக்கங்களையும் கிண்ணத்தையும் பெறாமல் விட்டனரோ அதேபோன்ற நிகழ்வுகளுடன் மகளிர் ஆசிய கிண்ண  கிரிக்கெட்டும் நேற்று முடிவுக்கு வந்தது.

ஹாமன்ப்ரீத் கோர் தலைமையிலான இந்திய அணிக்கு பதக்கங்களோ ஆசிய கிண்ணமோ வழங்கப்படவில்லை.

இறுதிப் போட்டி முடிவுக்குப் பின்னர் சுமார் 50 நிமிடங்கள் தாமதத்தின் பின்னரே பரிசளிப்பு வைபவம் நடைபெற்றது.

உப சம்பியனான இலங்கை அணியினருக்கு  பதக்கங்கள் வழங்கப்பட்டபோது, ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவரும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவரும், பாகிஸ்தானின் உள்துறை அமைச்சருமான மோஹ்சின் நக்வி கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து பரிசளிப்பு வைபவம் திடீரென முடிவுக்கு வந்தது.

சிறந்த களத்தடுப்பாளருக்கான விருது வழங்கும் நிகழ்வை இந்தியா தானாகவே முன்வந்து நடத்தியது.

சிறந்த களத்தடுப்பாளராக தெரிவான நந்தனி ஷர்மாவுக்கான விருதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை செயலாளர் தேவஜித் சய்க்கியா வழங்கினார். சபையின் உப தலைவர் ராஜீவ் சுக்லா, இந்திய களத்தடுப்புப் பயிற்றுநர் முனிஷ் பாலி ஆகியோரும் வைபவத்தில் இருந்தனர்.

கடந்த வருடம் செப்டம்பரில் நடைபெற்ற ஆடவர் ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியை நேற்றைய இறுதிப் போட்டி பிரதிபலித்தது.

2025 போட்டியின் முடிவில், நக்வியிடமிருந்து கிண்ணத்தை ஏற்க இந்தியா மறுத்தது. அப்போது, ‘பாகிஸ்தானின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக’ இருப்பவரிடமிருந்து கிண்ணத்தை ஏற்க இந்திய அணி விரும்பவில்லை என்று சாய்க்கியா கூறியிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த பரிசளிப்பு விழாவில் நக்வியின் பங்கேற்பு ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லைப் பதற்றம்  2025ஆம் ஆண்டு மே மாதம் மோசமடைந்ததிலிருந்து, பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகளுடன் கைகுலுக்குவதை  இந்திய வீரர்கள்   தவிர்த்து வருகின்றனர். கடந்த வருடம் ஆடவர் போட்டியில்  இந்திய  வீரர்கள் அவ்வாறு செய்யவில்லை. இவ் வருடம் மகளிர் போட்டியில்   இந்திய  வீராங்கனைகளும் அதையே பின்பற்றினர்.

‘இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது, நாங்கள் அதில் உறுதியாக இருக்கிறோம்’ என போட்டிக்குப் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்திய பயிற்றுநர் அமோல் முஸும்தார் கூறினார்.

‘எங்களைப் பொறுத்தவரை, இந்தத் தொடர் முடிந்துவிட்டது, நாங்கள் சம்பியன்கள். அதுவே போதுமானது. 2026 ஆசிய கிண்ண சம்பியன் இந்தியா என்று பெரிய பலகையில் எழுதப்பட்டிருந்தது. எங்களைப் பொறுத்தவரை இந்தத் தொடர் உத்தியோகபூர்வமாக முடிந்துவிட்டது. நாங்கள் சம்பியன்கள் என்பதில் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் ஆசிய விளையாட்டு விழாவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்’ என அவர் மேலும் கூறினார்.

போட்டிக்குப் பிந்தைய பரிசளிப்பு விழாவில் வெற்றி பெற்ற அணித் தலைவரை பேட்டி காண்பது வழக்கம் என்றாலும், இந்தியா வெற்றிபெற்ற  சில நிமிடங்களுக்குப் பின்னர் ஹாமன்ப்ரீத் நேரடி ஒளிபரப்பில் தனியாகப் பேட்டி யில் கலந்துகொண்டார்.

‘நாங்கள் கலந்துரையாடியபடிதான் நாங்கள் இங்கு வந்து விளையாடினோம் என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு சில தரநிலைகள் உள்ளன, அவற்றை நாங்கள் ஒவ்வொரு நாளும் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்,’ என்று அவர் கூறினார்.

‘நாங்கள் அனைவரும் செயல்பட்ட விதத்தில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், இந்தத் தொடர் முழுவதும் வீராங்கனைகள் அற்புதமாகச் செயல்பட்டுள்ளனர் என்று நான் நினைக்கிறேன். இறுதிப் போட்டியில் 184 ஒட்டங்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது ஒரு பெரிய விஷயம்’ எனவும் அவர் கூறினார்.

‘துபாயின் மெதுவான ஆடுகளங்களில் மந்தமான ஆடுகளஙகளில் துடுப்பெடுத்தாடுவது அவ்வளவு எளிதல்ல என்பது எங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், எங்களது ஆரம்ப வீராங்கனைகளான ஸ்ம்ருதி மற்றும் ஷஃபாலி ஆகிய இருவரும் துடுப்பெடுத்தாடிய விதம், எங்களுக்க மிகச் சிறப்பாக அமைந்தது என நான் நினைக்கிறேன். இவை அனைத்தும் சிறந்த கிரிக்கெட் விளையாடுவதைப் பற்றியது. இறுதியில், ஒட்டுமொத்தமாக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்’ என்றார் ஹாமன்ப்ரீத் கோர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.