தென் கொரியாவில் தற்கொலை செய்து கொள்ள 20-ஆவது மாடியிலிருந்து குதித்த இளைஞர் மோதி, சாலையில் சென்று கொண்டிருந்த மற்றொருவரும் பலியானார்.
இதுகுறித்து அந்த நாட்டின் யோன்ஹப் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது: நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள குவாங்ஜு நகரில், தற்கொலை செய்து கொள்வதற்காக 25 வயது மாணவர் 20 மாடிக் கட்டடத்தின் உச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை குதித்தார். அப்போது பணி முடிந்து தனது கர்ப்பிணி மனைவி, 5 வயது மகனுடன் சாலையில் நடைப்பயிற்சி சென்று கொண்டிருந்த 38 வயது அரசு ஊழியர் மீது அந்த மாணவர் வேகமாக மோதினார்.
இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அருகிலுள்ள மருத்துவமனையில் அவர்கள் சேர்க்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
சாலையில் சென்று உயிரிழந்த நபரின் குடும்பத்தினருக்கு ஆயுள் காப்பீட்டுப் பலன்கள் கிடைக்கச் செய்வதற்காக, தற்கொலை செய்து கொண்ட மாணவர் மீது உயிரிழப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டை பதிவு செய்யவிருப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இவ்வாறு அந்த செய்தி நிறுவனம் தெரிவித்தது.