செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் முக்கிய உச்சி மாநாடு ஆரம்பம்

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களின் முக்கிய உச்சி மாநாடு ஆரம்பம்

1 minutes read

சீனாவிலிருந்து அதிகரித்துவரும் இறக்குமதிகளைக் கட்டுப்படுத்துதல், உயர்வடைந்துள்ள எரிசக்தி விலைகளைக் குறைத்தல் மற்றும் எதிர்கால ஐரோப்பிய ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் தொடர்பான கருத்து வேறுபாடுகளைத் தீர்த்தல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆராய்வதற்காக, ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு, இன்று வியாழக்கிழமை ஆரம்பமானது.

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஹைபிரிட் (Hybrid) ரக வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஆணையம் பெய்ஜிங்குடன் இருதரப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்ட சில நாட்களிலேயே, ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் இந்த உச்சிமாநாட்டில் ஒன்றுகூடியுள்ளனர்.

சீனாவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியம் எடுத்துள்ள விரிவான முன்னெடுப்புகளின் ஆரம்பப் படியாக இந்த ஒப்பந்தம் பார்க்கப்படுகின்றது.

சீனாவுடனான சரக்கு வர்த்தகப் பற்றாக்குறை கடந்த 2025ஆம் ஆண்டில் 360 பில்லியன் யூரோக்களைத் தொட்டிருந்த நிலையில், நடப்பு ஆண்டில் அந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில், உச்சிமாநாட்டின் வரைவு அறிக்கையின்படி, பெய்ஜிங்குடன் பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு ஆணையத்தைக் கேட்டுக்கொள்ளத் தலைவர்கள் தீர்மானித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் நலன்களைப் பாதுகாப்பதற்காக வர்த்தகத் தற்காப்பு நடவடிக்கைகளை முழுமையாகப் பயன்படுத்தவும், புதிய வர்த்தக ஒழுங்குமுறைகளை அமுல்படுத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளை, சீன இறக்குமதிகள் தொடர்பில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் கடந்த வாரம் வெளியிட்ட கூட்டறிக்கையே இந்த உச்சிமாநாட்டு விவாதங்களின் முக்கிய பேசுபொருளாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இரசாயனப் பொருட்கள் மற்றும் ‘பிஈரி’ (PET) பிளாஸ்டிக் இறக்குமதியைக் கையாள்வதற்கு உடனடி நடவடிக்கைகள் அவசியம் எனவும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதிக்கும் நாடுகளுக்கு எதிராகத் தாமதமின்றிப் பதிலடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் இந்த இரண்டு பெரும் பொருளாதார நாடுகளும் வலியுறுத்தியுள்ளன.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை சீன மின்சார வாகனங்கள் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் மானிய எதிர்ப்பு வரிகளைத் தீவிரமாக எதிர்த்து வந்த ஜேர்மனி, தற்போது இத்தகைய கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதொரு மாற்றமாகக் கருதப்படுகின்றது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் 2028 முதல் 2034 ஆம் ஆண்டு வரையான அடுத்த ஏழு ஆண்டுகளுக்கான வரவு-செலவுத் திட்டம் குறித்தும் தலைவர்கள் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர். இந்த வரவுசெலவுத் திட்டத்திற்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும் ஒருமனதான இணக்கப்பாடு தேவைப்படுவதால், இதற்கென எதிர்வரும் நவம்பர் மாத இறுதியில் விசேட உச்சிமாநாடு ஒன்று நடத்தப்படவுள்ளது.

அத்துடன், நாளை வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள முக்கிய அமர்வில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் செலென்ஸ்கி கலந்துகொள்ளவுள்ள நிலையில், உக்ரைனின் 2027ஆம் ஆண்டுக்கான நிதித் தேவைகள் குறித்துப் பேசப்படவுள்ளதுடன், ரஷ்ய டீசல் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் தங்களது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்த வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.