இங்கிலாந்தில் வீடொன்றில் இடம்பெற்ற மது விருந்துபசாரத்தின்போது, பாதுகாப்புப் பூட்டுக்கு பதிலாகத் தூண்டுவிசையைத் தவறுதலாக அழுத்தியதால் தனது நண்பன் மீது காற்றுத் துப்பாக்கியால் (Air rifle) சூடு நடத்தப்பட்டதாக இளைஞன் ஒருவர், மரண விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
டாட்லியைச் சேர்ந்த 17 வயதான கொனர் பெல் என்ற இளைஞன், 2025ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் திகதி பேசிங்ஸ்டோக் அருகேயுள்ள சைன்ஹாம் பகுதியிலுள்ள வீடொன்றில் நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்த போதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தின்போது ஜேக் பீச்சி என்பவரால் சுடப்பட்ட தோட்டா பெல்லின் வலது கண் குழியின் ஊடாக ஊடுருவி, மூளையில் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதுடன் மாரடைப்பையும் தோற்றுவித்தது. இதனையடுத்து சவுத்தாம்டன் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், இரண்டு நாட்களுக்குப் பின்னர் உயிரிழந்தார் என வின்செஸ்டர் மரண விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
ஆயுதங்களைக் கையாளும் சரியான திறனின்மை காரணமாக நேர்ந்த விபத்து மரணம் என மரண விசாரணை அதிகாரி ஜேசன் பெக் தீர்ப்பளித்தார்.
ஒரு சில நண்பர்கள் மட்டுமே வீட்டுக்கு வருவார்கள் என்றும் காற்றுத் துப்பாக்கி அலுமாரியில் பூட்டி வைக்கப்படும் என்றும் ஜோசுவா பிரவுன் தனது பெற்றோருடன் ஒப்புக்கொண்டதாக விசாரணையில் கூறப்பட்டது. எனினும், பெற்றோருக்குத் தெரியப்படுத்தியதை விட அதிகமான நண்பர்கள் அங்கு வருகை தந்ததுடன், அவர்கள் வோட்கா, சைடர் மற்றும் பியர் போன்ற மதுபானங்களை அருந்தியுள்ளனர்.
பின்னர் 0.177 கலிபர் துப்பாக்கியை வெளியே எடுத்து, வீட்டின் பின்புற தோட்டத்திலிருந்த போத்தல்களை நோக்கிப் பிரதான அறையிலிருந்து சுட்டு விளையாடியுள்ளனர். துப்பாக்கியை மீண்டும் உள்ளே வைக்குமாறு பிரவுன் கூறியபோது, தாம் சற்று மதுபோதையில் இருந்ததாக தற்போது 18 வயதாகும் பீச்சி வாக்குமூலம் அளித்துள்ளார்.
துப்பாக்கியில் எஞ்சியிருந்த தோட்டாக்களையும் சுட்டுத் தீர்த்துவிட்டால் பாதுகாப்பானது என நினைத்து, அது வெறுமையாகிவிட்டதாகக் கருதியுள்ளார்.
எனினும், சமையலறைக்குள் நடந்து சென்றபோது, அருகில் நின்றுகொண்டிருந்த பெல் மீது தவறுதலாகத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பூட்டைப் போட முயன்றதாகவும், பாதுகாப்புப் பூட்டு தூண்டுவிசைக்கு நேர் முன்னால் இருந்ததால் தூண்டுவிசையைத் தவறாக அழுத்திவிட்டதாகவும் பீச்சி குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து வரவேற்பறைக்கு ஓடிவந்த பீச்சி, தாம் பெல் மீது சுட்டுவிட்டதாகப் பதற்றத்துடன் கூறியுள்ளார்.
சிறிய சந்திப்பாகத் திட்டமிடப்பட்ட நிகழ்வு பாரிய வீட்டு விருந்தாக மாறியதுடன், நண்பர்கள் பெருமளவிலான மதுபானங்களைக் கொண்டு வந்திருந்ததாக விசாரணை அதிகாரி குறிப்பிட்டார்.
மது அருந்தியிருந்த இளைஞர்கள் மத்தியில் இத்தகைய விபத்து ஏற்படுவதற்கான உண்மையான அபாயமும் தவிர்க்க முடியாத சூழலும் நிலவியதாகக் குறிப்பிட்ட அவர், இது மிகவும் துயரமான ஒரு சம்பவம் என்றும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் கடும் காயத்தை ஏற்படுத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞன் மீது, அரச வழக்கறிஞர் திணைக்களம் மற்றும் உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தினருடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளைத் தொடர்ந்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்பட மாட்டாது என ஹாம்ப்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர்.
விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்டவரும், நண்பர்கள் வட்டாரத்தில் மிகுந்த அன்பைப் பெற்றவருமான தனது மகன் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என உயிரிழந்த கொனர் பெல்லின் தந்தை ரொபர்ட் பெல் நினைவுகூர்ந்துள்ளார்.
சம்பவ இடத்தில் நண்பர்களால் வழங்கப்பட்ட முதலுதவி சிகிச்சை காரணமாக அவர் உடல் உறுப்புக் கொடையாளராக மாற முடிந்ததாகவும், இதற்காக அவருக்கு ‘சென்ட் ஜோன் விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
காற்றுத் துப்பாக்கிகளின் அபாயத்தை அனைவரும் உணர்ந்து, அவற்றை உரிய பயிற்சியும் திறனும் உள்ளவர்கள் மட்டுமே கையாள வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.