அடம் செய்ததற்காக பெற்றோரால் அடர்ந்த காட்டில் தனியாக விடப்பட்ட 7 வயதுச் சிறுவன், ஆறு நாள் தேடுதல் வேட்டைக்குப் பின் கண்டறியப்பட்ட சம்பவம் ஜப்பானில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
ஜப்பானின் ஹோக்காய்டோ தீவிலுள்ள அடர்ந்த மலைக்காடு வழியாக தகாயுகி தனூகா தம்பதி தனது 7 வயது மகன் யமாடோவை கடந்த சனிக்கிழமை காரில் அழைத்துச் சென்றனர்.
மிகவும் சுட்டிப் பையனான யமாடோ, கார்கள் மீதும், ஆட்கள் மீதும் கற்களை வீசியுள்ளான்.
அவ்வாறு வீசக் கூடாது என்று எவ்வளவு சொல்லியும் யமாடோ கேட்காததால் கோபம் தலைக்கேறிய பெற்றோர், சிறுவனை காரிலிருந்து இறக்கி, காட்டுப் பாதையில் விட்டுச் சென்றனர்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தபோது சிறுவன் யமாடோ அந்த இடத்தில் இல்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், இதுகுறித்து போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
காட்டுக் காய்கறிகளைப் பறித்துக் கொண்டிருக்கும்போது தங்கள் மகனைக் காணவில்லை என்று முதலில் அவர்கள் கூறினாலும், அடம் செய்ததற்குத் தண்டனையாகத்தான் யமாடோவை வழியில் இறக்கிவிட்டதாக பிறகு ஒப்புக் கொண்டனர்.
கரடிகள் உலாவும் அடர்ந்த காட்டில், 7 வயது பிஞ்சுச் சிறுவனை பெற்றோரே விட்டுச் சென்றது ஜப்பானில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது.
சிறுவன் யமாடோவைத் தேடும் பணியில் ராணுவம் இறங்கியது.
இந்த நிலையில், சிறுவன் இறக்கிவிடப்பட்ட இடத்திலிருந்து 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராணுவப் பயிற்சி மையத்தில், வீரர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள குடிலை ராணுவ அதிகாரி வெள்ளிக்கிழமை திறந்தபோது, உள்ளே 7 வயதுச் சிறுவன் இருப்பதைக் கண்டார்.
அந்தச் சிறுவனிடம், “”நீ யமாடோ தானே?” என்று அவர் கேட்டதற்கு, “”ஆமாம்” என்று மிகச் சாதாரணமாக பதில் சொன்னான் அந்தச் சிறுவன்.
6 நாள்களாக யார் முகத்தையும் பாராமல், உணவின்றி, அங்கிருந்த குழாய் நீரை மட்டுமே பருகி உயிர் வாழ்ந்திருந்தாலும், ராணுவ அதிகாரியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்படாமல் யமாடோ மன உறுதியுடன் பேசியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
பசியில் இருந்த அந்தச் சிறுவனுக்கு உணவு கொடுத்த அதிகாரிகள், மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பெற்றோருடன் மகன் ஒப்படைக்கப்படும் காட்சியும், சிறுவனை விட்டுச் சென்றதற்காக தந்தை மன்னிப்பு கேட்கும் காட்சியும், ஜப்பான் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.