மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியை கவுரவிக்கும் வகையில் ஏராளமான பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாக வானில் பறக்கவிடப்பட்டன.
உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை 3 முறை வென்று சாதனை படைத்தவர் முகமது அலி. அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் 1942-ம் ஆண்டு பிறந்த முகமது அலியின் இயற்பெயர் காசியஸ் க்ளே. தனது 18 வயதில் குத்துசண்டை களத்தில் இறங்கிய முகமது அலி 1960-ல் ஹெவிவெயிட் ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை பெற்றார். இதைத்தொடர்ந்து குத்துச்சண்டை என்றாலே முகமது அலி என்று சொல்லும் அளவுக்கு புகழ்பெற்றார். குத்துச்சண்டை களத்தில் மட்டுமின்றி அமெரிக்காவில் அக்காலத்தில் தீவிரமாக பரவியிருந்த இனவெறிக்கு எதிராகவும் அவர் போராடினார். அவர் குவிக்கும் வெற்றிகள் கறுப்பின மக்களிடையே புதிய எழுச்சியை ஏற்படுத்தின.
1960-ல் இருந்து 1981 வரை முகமது அலி குத்துச்சண்டை உலகின் முடிசூடா மன்னனாக இருந்தார். 61 தொழில்முறை குத்துச்சண்டை போட்டிகளில் 56-ல் வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இதில் 37 போட்டிகளில் நாக் அவுட் முறையில் வென்றதால் ‘நாக் அவுட் நாயகன்’ என்று அழைக்கப்பட்டார். 3 முறை உலக குத்துச்சண்டை சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஒரு தேனீயைப் போல களத்தில் வேகமாக செயலாற்றி கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியான குத்துகளை விட்டு எதிரிகளை நிலைகுலையச் செய்வது அவரது பாணியாக இருந்தது. இதனாலேயே தனது நாடான அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அவர் புகழ்பெற்றார்.
முகமது அலிக்கு 9 குழந்தைகள். அவரது மகள் லைலா அலி குத்துச்சண்டையில் உலக சாம்பியன் பட்டத்தை வென்றவர். முகமது அலியின் உடல் அடக்கம் சொந்த நகரான லூயிவிலியில் நடைபெற உள்ளது.
முகமது அலியை கவுரவிக்கும் பொருட்டு ஏராளமான பட்டாம்பூச்சிகள் சுதந்திரமாக வானில் பறக்கவிடப்பட்டன. கடின உழைப்பால் வாழ்வில் மிக பெரிய உயரத்திற்கு சென்ற முகமது அலி பட்டாம் பூச்சியை போல பறக்க வேண்டும், தேனியை போல செயலாற்ற வேண்டும் எனற மந்திரத்தை அடிக்கடி உச்சரிப்பார். முகமது அலியின் வார்த்தையை நினைவு கூறும் வகையில் அவரது சொந்த ஊரான லூயிஸ்வில்லே நகரத்தில் நான் அலி என்ற பெயரில் பட்டாம் புச்சிகளை பறக்கவிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் வயது விதியாசமின்றி ஏராளமானோர் கலந்து கொண்டு பட்டாம் பூச்சிகளை பறக்கவிட்டனர். லூயிஸ்வில்லே நகரத்தில் இஸ்லாமிய முறைப்படி அவருக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.