மாலத்தீவின் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கயூம் கடந்த ஆண்டு தனது மனைவி பாத்திமாவுடன் புனித ஹஜ் யாத்திரை சென்று விட்டு நாடு திரும்பினார். தலைநகர் மாலே அருகில் அமைந்துள்ள தீவின் சர்வதேச விமான நிலையத்தில் மனைவி, மெய்க்காவலர், உதவியாளருடன் வந்திறங்கிய அவர், அங்கிருந்து மாலேவுக்கு அதிவேக படகில் பயணம் செய்தார். அப்போது படகில் பயங்கர சத்தத்துடன் வெடிப்பு நேரிட்டது. அதில் அதிபர் அப்துல் கயூம் காயமின்றி தப்பினார். ஆனால் அவரது மனைவி பாத்திமாவும், மெய்க்காவலர் ஒருவரும், உதவியாளர் ஒருவரும் காயம் அடைந்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், படகில் வெடிப்பு ஏற்பட்டது, அதிபர் அப்துல் கயூமை கொல்வதற்காக நடந்த முயற்சி என்றும், அதில் அந்த நாட்டின் துணை அதிபர் அகமது அதீப் அப்துல் கபூருக்கு (33) தொடர்பு உள்ளது என்றும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பதவியும் இழந்தார்.
அதிபரை கொல்ல முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கதவுகள் பூட்டப்பட்டு, கோர்ட்டு அரங்கில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. 7 பேர் அளித்த சாட்சியங்களின் அடிப்படையில் அகமது அதீப் அப்துல் கபூர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக கருதிய கோர்ட்டு அவருக்கு 15 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தீர்ப்பு அளித்தது.
4 நாட்களுக்கு முன், மற்றொரு வழக்கில் தீவிரவாத குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.