சிங்கப்பூரில் இருந்து மிலன் நகருக்கு சென்ற பயணிகள் விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது. விமானம் அவசரமாக தரை இறக்கப்பட்டதால் அதில் பயணம் செய்த 222 பயணிகள் உயிர் தப்பினர்.
சிங்கப்பூரில் உள்ள சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 2.05 மணி அளவில் இத்தாலி நாட்டின் மிலன் நகருக்கு போயிங் 777–300 ரக பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில் 222 பயணிகளும், விமானிகள் உள்பட 19 ஊழியர்களும் இருந்தனர்.
2 மணி நேரம் கழித்து, அந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, என்ஜினின் எண்ணெய் டேங்க் பகுதியில் இருந்து எச்சரிக்கை குறிப்பு விமானிகளுக்கு கிடைத்தது.
இதனால் எந்த நேரமும் விமானம் தீப்பிடிக்கலாம் என்று கருதிய விமானிகள் உடனடியாக அந்த விமானத்தை சிங்கப்பூருக்கே திருப்ப முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து சிங்கப்பூர் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே அந்த விமானத்தின் வலது பக்க என்ஜின் பகுதியில் இருந்து மெதுவாக புகை வரத் தொடங்கியது.
எனினும், என்ஜின் பகுதி தீப்பற்றிக்கொள்வதற்குள் விமானம் காலை 6.50 மணி அளவில் சாங்கி விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் இருந்த பயணிகளும், விமான ஊழியர்களும் ஏணிப்படி வழியாக அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் ஒரு பஸ் மூலம் விமான நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் இறக்கை பகுதியில் தீ மளமளவென பரவியது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தில் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் இருந்ததால் விமானத்தில் பிடித்த தீ 10 நிமிடங்களுக்குள் முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இருந்தபோதிலும் விமானத்தின் வலது பக்க இறக்கை முற்றிலுமாக எரிந்து நாசமானது.
விமானத்தில் பயணம் செய்த சூயுன் என்பவர் கூறுகையில், ‘‘விமானம் நடுவானில் பறந்தபோது வாயு வெளியேறும் வாசனை வீசியது. அப்போது என்ஜினில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு இருப்பதாக அறிவித்த விமானி நாம் மீண்டும் சிங்கப்பூர் திரும்புகிறோம் என்றார். பயணிகளும் அமைதியாகி விட்டனர். ஆனால் விமானம் தரையிறங்கிய உடனேயே விமானம் தீப்பிடித்துக் கொண்டதைப் பார்த்தால் நாங்கள் மரணத்திற்கு எவ்வளவு அருகில் இருந்தோம் என்பதை உணர முடிகிறது’’ என்றார்.