ஏமன் நாட்டில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட 5 மனித வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் ராணுவ வீரர்கள் உள்பட 42 பேர் பலியாயினர்.
அரபு நாடுகளில் ஒன்றான ஏமனில் அரசுக்கு எதிராக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். இயக்கத்தினர் சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு ஏமன் நாட்டின் துறைமுக நகரான மொகல்லாவை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையடுத்து, சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள், ஏமன் அரசுக்கு ஆதரவாக வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அமெரிக்க ராணுவ வீரர்களும் மொகல்லாவில் சிறிய அளவில் குவிக்கப்பட்டு இருக்கின்றனர்.
கூட்டுப் படைகளின் ஓராண்டு தாக்குதலுக்கு பின்பு அல்கொய்தா, ஐ.எஸ். இயக்கத்தினர் மொகல்லாவில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இந்த நகரம் மீண்டும் ராணுவத்தின் வசம் வந்தது.
ராணுவத்தை நேருக்கு நேர் சந்தித்து சண்டையிட முடியாத இந்த அமைப்பினர் நகரில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி உயிர் மற்றும் பொருட்சேதம் ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர்.
நேற்று முன்தினம் மாலை ஐ.எஸ். இயக்கத்தினர் மொகல்லா நகரில் அலை அலையாக மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். ராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகளை குறிவைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த 5 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி 4 பகுதிகளில் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.
உடலில் கிலோ கணக்கில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு வந்து அவர்கள் நடத்திய இந்த தாக்குதல்களில் 40 ராணுவ வீரர்கள், ஒரு பெண், குழந்தை ஆகிய 42 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். 37 பேர் படுகாயம் அடைந்தனர்.
இவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்று இருக்கிறது. மொகல்லா ராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகளில் அடுத்தடுத்து 8 மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இதில், 50 பேர் கொல்லப்பட்டதாகவும் அந்த இயக்கம் கூறுகிறது.
மொகல்லா நகரில் இன்னும் ஏராளமான ஐ.எஸ். மற்றும் அல்கொய்தா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாக இருப்பதையே இந்த தாக்குதல்கள் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.