கிஷோர்கஞ்ச் மாவட்டத்தில் ஷோலாகியா என்ற இடத்தில் காலை சுமார் 9.45 மணிக்கு ரம்ஜான் தொழுகைக்காக சுமார் 3 லட்சம் பேர் கூடினர். போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தொழுகைக்காக வந்தவர்களை சோதித்து அனுப்பினர். அப்போது அங்கு 6 அல்லது 7 பயங்கரவாதிகள் கூர்மையான ஆயுதங்கள், வெடிகுண்டுகளுடன் அங்கு வந்தனர். அவர்கள் வந்த வேகத்தில் போலீசாரை கூர்மையான ஆயுதங்களால் தாக்கினர். வெடிகுண்டுகளையும் வீசினர்.
இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. தொழுகை நடத்த வந்தவர்கள், நாலா பக்கமும் அலறியவாறு சிதறி ஓடினர்.
பயங்கரவாதிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டையும் நடந்தது.
இந்த தாக்குதல்களில்
2 போலீசாரும், ஒரு பெண்ணும் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவரும் பலியாகினார். சுமார் 15 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு ஆம்புலன்சுகளில் அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆயுதங்கள் சிக்கின
இது தொடர்பாக கிஷோர்கஞ்ச் போலீஸ் கூடுதல் சூப்பிரண்டு அபு சயீம் கூறும்போது, ‘‘இந்த தாக்குதலில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். ஒரு பெண்ணும் பலியாகி இருக்கிறார். அந்தப் பெண் ஒரு இந்துப்பெண். அவரது வீட்டுக்குள் குண்டு ஊடுருவி சென்று தாக்கியதில் அவர் பலியானார். தாக்குதல் நடத்திய பயங்கரவாதி ஒருவரும் உயிரிழந்தார். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்’’ என கூறினார்.
சம்பவ இடத்தை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து விசாரணை நடத்துகின்றனர். கூடுதல் போலீஸ் படைகள் அங்கு விரைந்து வந்தன. சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், அரிவாள், கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டன.
‘‘டாக்கா ஓட்டலில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதல் ஒரு சிறிய முன்னோட்டம்தான், வங்காளதேசத்தில் இஸ்லாமிய சட்டத்தின் ஆட்சி ஏற்படுத்தப்படும் வரையில் தாக்குதல்கள் தொடரும்’’ என ஐ.எஸ். இயக்கத்தினர் நேற்று முன்தினம் மிரட்டல் வீடியோ வெளியிட்ட நிலையில், இந்த தாக்குதல் நடந்திருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.