இராக்கில் அரசியல் சீர்திருத்தம் கொண்டு வர வலியுறுத்தி, ஷியா பிரிவுத் தலைவர் முக்தாதா அல்-சதர் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டப் பேரணி நடத்தினர்.
பயங்கரவாதத் தாக்குதல் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி அந்தப் பேரணிக்கு அரசு விதித்தத் தடையையும் மீறி அந்தப் பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
இராக்கில் இன சார்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஊழலை ஒழிக்கவும் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ள ஷியா பிரிவு மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் வலியுறுத்தி வருகிறார். அவரது அழைப்பை ஏற்று, அந்த நாட்டில் நாடாளுமன்ற முற்றுகைப் போராட்டம் உள்ளிட்ட ஏராளமான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சூழலில், அரசியல் சீர்திருத்தத்தை வலியுறுத்தி தலைநகர் பாக்தாதில் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்த அல்-சதர் அழைப்பு விடுத்திருந்தார்.
எனினும், பாக்தாதில் அண்மையில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அந்தப் போராட்டத்துக்கு அரசு தடை விதித்தது.
எனினும் அந்தத் தடையையும் மீறி, போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டப் பேரணி தொடங்கிய தாஹிர் சதுக்கத்துக்கு வந்த ஆதரவாளர்களிடையே தோன்றிய முக்தாதா அல்-சதர், பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக அங்கிருந்து வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து அவரது உரையை செய்தித் தொடர்பாளர் வாசித்தார்.
அந்த உரையில் அல்-சதர் குறிப்பிட்டதாவது:
ஊழலில் ஈடுபட்ட அதிகாரிகளை பதவி நீக்கம் செய்து, அவர்கள் மீது விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இன அடிப்படையிலும், கட்சி அடிப்படையும் பதவி ஒதுக்கீடு செய்வது நிறுத்தப்பட வேண்டும்.
கல்வியறிவு பெற்ற அறிஞர்களுக்கு பதவிகள் வழங்கப்பட வேண்டும் என்று அந்த உரையில் அல்-சதர் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.