பிரிட்டனில் எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்தப்படும் அச்சுறுத்தல் உள்ளதாக காவல் துறைத் தலைவர் பெர்னார்டு ஹோகன் ஹெள கூறினார்.
இது தொடர்பாக லண்டனில் அவர் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
பயங்கரவாதத் தாக்குதல் குறித்த அச்சம் மக்கள் மனதில் இருப்பதை என்னால் உணர முடிகிறது. காவல் துறை தலைவர் என்கிற முறையில் அதுபோன்ற தாக்குதல்கள் நடைபெறாமல் இருக்க நான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பது இயற்கை.
ஆனால் தாக்குதல்களை முழுமையாகத் தடுத்துவிட முடியும் என்று உறுதியாகக் கூற முடியாது. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிட்டனில் தீவிர பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்து வருகிறது. அது இப்போதும் தொடர்கிறது.
பயங்கரவாதத் தாக்குதல் நடக்குமா என்று நினைப்பதைவிட, எப்போது நடக்கும் என்பதுதான் இப்போதைய கேள்வி.
பொது இடங்களில் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து வணிகர்கள், விளையாட்டு அரங்குகளின் அதிகாரிகள் ஆகியோருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் கடந்த வாரம் ஆலோசனை நடத்தினார் என்று காவல் துறைத் தலைவர் தெரிவித்தார்.
தற்போதைய நிலையில் பிரிட்டனில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்துவது தொடர்பாக 4 சதித் திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதாக உளவுத் தகவல் கிடைத்துள்ளது. அவற்றின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.