யேமன் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஐ.நா. முன்வைத்த அமைதித் தீர்வை ஹூதி கிளர்ச்சியாளர்கள் நிராகரித்தனர்.
இதுகுறித்து, கிளர்ச்சியாளர்களின் செய்தி நிறுவனம் தெரிவித்ததாவது:
யேமனில் அமைதியை ஏற்படுத்துவதற்காக குவைத் சிட்டியில் ஐ.நா. பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது முன் வைக்கப்பட்ட தீர்வை ஏற்க கிளர்ச்சியாளர்கள் மறுத்தனர்.
அந்த தீர்வுத் திட்டத்தில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து சில யோசனைகள் மட்டுமே இடம் பெற்றிருப்பதாகவும், முக்கியப் பிரச்னைகள் குறித்து இன்னும் விவாதிக்க வேண்டியுள்ளது எனவும் கிளர்ச்சியாளர்கள் சார்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள குழுவினர் தெரிவித்தனர்.
யேமனில் அனைத்துத் தரப்பினரும் ஏற்கக் கூடிய புதிய ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும், புதிய அதிபரைக் கொண்ட புதிய அரசு அமைக்கப்பட வேண்டும் என்ற தங்களது நிபந்தனையை ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
ஐ.நா.வின் தீர்வு முன்வரைவை நிராகரித்தாலும், பேச்சுவார்த்தையை மேலும் ஒரு வாரம் நீட்டிப்பது குறித்து பரிசீலிப்பதாக ஐ.நா. பிரதிநிதி சேக் அகமது கூறியதை கிளர்ச்சியாளர்கள் வரவேற்றுள்ளனர்.
ஐ.நா. முன்வைத்த தீர்வுத் திட்டத்தை ஏற்பதாக யேமன் அரசு அறிவித்திருப்பது, பேச்சுவார்த்தையை தோல்வியடையச் செய்வதற்கான முயற்சி என்று கிளர்ச்சியாளர்களின் செய்தி நிறுவனம் தெரிவித்தது.
முன்னதாக, குவைத் சிட்டியில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையில், யேமனில் அமைதி திரும்புவதற்கான சில தீர்வுகளை ஐ.நா. முன்வைத்தது. தலைநகர் சனாவிலிருந்து கிளர்ச்சியாளர்கள் வெளியேற வேண்டும். மேலும், தயீஸ், அல்-ஹுதைதா ஆகிய நகரங்களை ஆக்கிரமித்துள்ள கிளர்ச்சியாளர்கள் படை வெளியேற வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் அந்த வரைவுத் தீர்வில் பெற்றன.
இந்த வரைவுத் தீர்வை ஏற்பதாக அறிவித்த யேமன் அரசு, வரும் ஆகஸ்ட் மாதம் 7-ஆம் தேதிக்குள் அமைதி ஒப்பந்தத்தில் கிளர்ச்சியாளர்கள் கையெழுத்திட வேண்டும் என்று கெடு விதித்தது.