அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நேரடி விவாதத்தில் ஹிலாரி–டிரம்ப் கடுமையாக மோதிக்கொண்டனர். இது தொடர்பாக கருத்துக்கணிப்புகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிற ஜனநாயக கட்சி, குடியரசு கட்சி வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் நடத்துகிற வழக்கம், 1960–ம் ஆண்டில் இருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது.
அந்த வழக்கத்தின்படி, நவம்பர் 8–ந் தேதி நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் (வயது 68), குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் (70) ஆகிய இருவரும் பங்கேற்ற முதல் விவாதம், நியூயார்க் நகரில் உள்ள ஹாப்ஸ்டிரா பல்கலைக்கழக அரங்கில் நேற்று காலை நடந்தது. 90 நிமிடம் நீடித்த இந்த விவாதத்தை 10 கோடி பேருக்கும் மேற்பட்டோர் தொலைக் காட்சி வழியாக பார்த்தனர்.
இன பிரச்சினைகள், வேலைவாய்ப்பு, வரிகள், நாட்டின் பாதுகாப்பு, பயங்கரவாதம் என பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டபோது இருவரும் நேருக்கு நேர் கடுமையாக மோதிக்கொண்டனர்.
தனிப்பட்ட முறையிலும் தாக்குதல் இல்லாமல் இல்லை. சமீபத்தில் நிமோனியா காய்ச்சல் தாக்கி மீண்டும் வந்துள்ள ஹிலாரியின் உடல் வலு குறித்து டிரம்ப் கேள்வி எழுப்பினார். அவர் அப்படி தன்னைப்பற்றி தனிப்பட்ட முறையில் அவமதித்தபோதெல்லாம், அவற்றுக்கு ஹிலாரி புன்னகையையே பதிலாக தந்தார். அதே நேரத்தில் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் அதிரடியாக வாதங்களை முன்வைத்து, டிரம்ப் தற்காப்பு விவாதம் வைக்கிற நிலையை ஏற்படுத்தினார்.
வருமான வரி கணக்கு விவரங்களை டிரம்ப் வெளியிடாமல் மறைக்கிறார் என ஹிலாரி குற்றம்சாட்டியபோது, ‘‘நீங்கள் அமெரிக்க வெளியுறவு மந்திரி பதவி வகித்த காலகட்டத்தில் 33 ஆயிரம் இமெயில்களை அழித்ததை மீண்டும் எப்போது வெளியிடுகிறீர்களோ, அப்போது நானும் என் வருமான வரி கணக்கை வெளியிடுவேன்’’ என டிரம்ப் பதிலடி கொடுத்தார்.
டிரம்ப் பெண்களுக்கு எதிரானவர் என்ற குற்றச்சாட்டை ஹிலாரி சுமத்தினார்.
டிரம்ப், ‘‘அவருக்கு (ஹிலாரிக்கு) பார்வை இல்லை. அவருக்கு வலு இல்லை. அவருக்கு வலு இருக்கிறது என்று நான் நம்பவில்லை. நாட்டின் ஜனாதிபதி ஆக வேண்டுமென்றால் அதற்கு அபாரமான வலு இருக்க வேண்டும்’’ என சாடினார்.
அதற்கு ஹிலாரி, ‘‘நல்லது. நான் 112 நாடுகளுக்கு சென்றிருக்கிறேன். பேச்சுவார்த்தைகள் நடத்தி இருக்கிறேன். ஒப்பந்தங்கள் செய்திருக்கிறேன். சண்டை நிறுத்தம் செய்திருக்கிறேன். பாராளுமன்ற குழு முன் ஆஜராகி 11 மணி நேரம் வாக்குமூலம் அளித்திருக்கிறேன். நீங்கள் என்னிடம் வலுவைப்பற்றி பேசுகிறீர்கள்’’ என பதிலடி தந்தார்.
அரசியலில் குதித்து முதல்முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் டிரம்ப், ‘‘ஹிலாரி அனுபவமிக்கவர், ஆனால் அந்த அனுபவம் மோசமான அனுபவம்’’ என கிண்டலடித்தார்.
ஆனால் ஹிலாரி விவாதித்தபோது பல முறை டிரம்ப் குறுக்கிட்டார். ஆவேசப்பட்டார். ஆனால் ஹிலாரி அமைதியாக காட்சி அளித்தார்.
ஹிலாரியின் உடல் வலுவைப்பற்றி சாடிய டிரம்ப், தனது வாதத்தின்போது பல முறை தண்ணீர் குடித்தார்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கான திட்டம் ஏதும் ஹிலாரியிடம் இல்லை என டிரம்ப் கூறினார். ‘‘ஹிலாரி ஜனாதிபதியானால் அவரது மோசமான அனுபவங்களை இன்னும் 4 ஆண்டுகள் இந்த நாடு தாங்காது’’ என்றும் விமர்சித்தார்.
ஆனால் அதை திட்டவட்டமாக ஹிலாரி மறுத்தார். ‘‘ஐ.எஸ். பயங்கரவாதிகளை தோற்கடிப்பதற்கு என்னிடம் திட்டம் இருக்கிறது. இணையதளம் வாயிலான செயல்பாடுகளில் இருந்து ஐ.எஸ். அமைப்பினரை தடுப்பதற்கு நாம் நமது தொழில் நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து இன்னும் நிறைய செய்ய வேண்டியதிருக்கிறது’’ என கூறினார்.
இருவரின் விவாதமும் ஒரு கேள்வியோடு முடிந்தது. அந்தக் கேள்வி, ‘‘தேர்தல் முடிவு எப்படி அமைந்தாலும் ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்வீர்களா?’’ என்பதாகும்.
டிரம்ப், ‘‘அவர் (ஹிலாரி) வெற்றி பெற்றால், நான் முழுமையாக அவரை ஆதரிப்பேன்’’ என கூறினார்.
ஹிலாரி, டிரம்ப் விவாதத்தை பார்த்தவர்களிடையே சி.என்.என்., ஆர்க் நிறுவனங்கள் கருத்துக்கணிப்பு நடத்தின. அவர்களில் 62 சதவீத வாக்காளர்கள் ஹிலாரிதான் முன்னிலை பெறுவார் என கூறினர். டிரம்புக்கு ஆதரவாக 27 சதவீதம் பேர் மட்டுமே கருத்து தெரிவித்துள்ளனர்.
சி.என்.பி.சி. இணையதளம் நடத்திய கருத்துக்கணிப்பில், 61 சதவீதம் பேர் டிரம்ப் வெற்றி பெறுவார் எனவும், 39 சதவீதம்பேர் ஹிலாரி வெற்றி பெறுவார் எனவும் கூறி உள்ளனர்.