அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல் முறையாக தீபாவளி கொண்டாட்டம் நடந்தது. இதில் குத்துவிளக்கு ஏற்றி அதிபர் ஒபாமா தீபாவளி கொண்டாடினார். அமெரிக்க அதிபராக ஒபாமா 2008ல் பதவி ஏற்றார். அந்த சமயத்தில் இந்திய சுற்றுப்பயணம் வந்தபோது மும்பையில் தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அவரது மனதை விட்டு அந்த விழா நிகழ்ச்சிகள் அகலவில்லை. 2009ல் தீபாவளி தினத்தில் அமெரிக்க அதிபர் மாளிகையில் முதல் முறையாக அவர் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அன்று வெள்ளை மாளிகையில் பணியாற்றும் அமெரிக்கா வாழ் இந்தியர்களை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
நேற்றும் ஒபாமா தீபாவளி கொண்டாடினார். வெள்ளை மாளிகையில் பணியாற்றும் இந்தியர்கள் முன் முதல் முறையாக அதிபருக்கான ஓவல் அலுவலகத்தில் குத்துவிளக்கு ஏற்றி ஒபாமா இந்த விழாவை கொண்டாடினார். அதன்பின் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘‘இருளை எப்படி விரட்டியடித்து ஒளி பரவுகிறது என்பதற்கு விளக்கு உதாரணமாக உள்ளது. இது ஒரு மிகப்பெரிய பாரம்பரியம். இனிவரும் அதிபர்களும் இந்த நிகழ்ச்சியை நடத்துவார்கள் என நான் நம்புகிறேன்’’ என்றார்.
* தீபாவளி கொண்டாடிய படத்தை ஒபாமா தனது பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார். அதற்கு 1.5 லட்சம் பேர் லைக் போட்டுள்ளனர். 33 ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர்.