பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வற்கான பாரிஸ் ஒப்பந்தம், சர்வதேச சட்டமாக அமலுக்கு வந்தது.
உலகளாவிய பிரச்னையான பூமி வெப்ப மய மாதலை கட்டுப்படுத்த, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், கடந்த ஆண்டு இறுதியில், இந்தியா உட்பட, 170க்கும் மேற் பட்ட நாடுகள், பாரிஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்த, 55 நாடுகளா வது இதில் இணைய வேண்டும்.
இந்நிலையில் பாரிஸ் ஒப்பந்தத்தில் 96 நாடுகள், அதாவது மூன்றில் 2 பங்கு நாடுகள் முறைப்படி இணைந்ததை அடுத்து, இந்த ஒப்பந்தம், சட்டமாக நேற்று(நவ.,4) அமலுக்கு வந்தது. அடுத்த வாரத்தில் மேலும் பல நாடுகள், அந்த ஒப்பந்தத்தில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, மொராக்கோவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள பருவநிலை மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளது. மேலும் பாரிஸ் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் எப்படிப் பங்காற்ற வேண்டும் என்பதை பல்வேறு அமைப்புகளுடன் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தி விவாதிக்க ஐ.நா., பொதுச் செயலர் பான்-கீ-மூன் திட்டமிட்டுள்ளார்.