11
சிவப்புச் சேறாகி
காலைப் புதைத்தது
சுதந்திரபுரத்து வீதி.
காய்ந்து விழுந்த
தென்னம் மட்டைகளாக
கவனிப்பாரற்றுக் கிடந்தன
மனிதத் துண்டங்கள்.
வரண்ட முலை
பருகிக் கிடந்த
குழந்தையின்
தலையைத் தேடினாள்
தாய்.
புதைக்கவும்
இடமின்றி
பொலித்தீன் பையில்
மணத்துக் கிடந்தாள்
தோழி.
இண்டைக்கு இரவு
தண்ணியைக்
கடக்க வேணும்
கடைசியாக
சொல்லிக் கொண்டனர்
சனங்கள்.
முள்ளந்தண்டை
நிமிர்த்தி நான்
முதுகில்
சுமந்த
துப்பாக்கி
வெற்றிரும்பாகி – என்
கைகளில்
கனத்தது
நன்றி : தமிழினி ஜெயக்குமாரன் | பதிவுகள் இணையம்