“உலகின் மூத்த மொழி — தமிழ் மொழி” எனும் இந்நூல், தனது நூலாக்கப் பயணத்தின் மூன்றாவது முயற்சி என்று விக்டர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில், “எனது முதல் இரண்டு நூல்களும் தமிழ் மக்களுக்காக எழுதப்பட்டவை. இந்நூல் தமிழ் மொழிக்காகவே உருவாக்கப்பட்டது. தமிழின் தொன்மை, தனித்துவம், சிறப்பு ஆகியவற்றை உலகறியச் செய்வதே இதன் நோக்கமாகும்.
இந்நூலின் முதல் வெளியீடு கனடாவின் ரொறன்ரோவிலும், இரண்டாவது வெளியீடு யாழ்ப்பாணத்திலும் பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றன.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில், போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து விதவைகள் சிலருக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் நிதியுதவி வழங்கப்பட்டது. இதனால், இந்நிகழ்வு தமிழ்ப்பணியுடன் இணைந்த மனிதநேயப் பணியாகவும் அமைந்தது.
இந்நூலின் மூன்றாவது வெளியீடு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் விரைவில் நடைபெறவுள்ளது. உலகின் மூத்த மொழியான தமிழின் பெருமையை உலகெங்கும் பரப்பி, அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதே எனது நோக்கமாகும்…” என்று குறிப்பிட்டுள்ளார்.