இந்தியாவிலிருந்து வெளியேறி லண்டனில் பதுங்கியுள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்த வேண்டும் என இங்கிலாந்திடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
தொழிலதிபர் விஜய் மல்லையா, பல்வேறு வங்கிகளிடம் ரூ. 9,000 கோடி வரை கடன் பாக்கி வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் தேதி அவர் நாட்டைவிட்டு வெளியேறி லண்டனில் பதுங்கியுள்ளார்.
இதனிடையே, கடனை திரும்பச் செலுத்தாதது தொடர்பாக, அவர் மீது வெளிவர முடியாத கைது ஆணையை சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் பிறப்பித்தது.
இதையடுத்து, அவரை லண்டனிலிருந்து நாட்டுக்கு திரும்ப அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைத்திருந்தது. இந்நிலையில், அவரை நாடு கடத்த இந்தியா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட பல வங்கிகளில் வாங்கிய கடனை செலுத்தாமல் தலைமறைவாகி இருப்பதால் அவரது சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
மேலும் கடன் பாக்கியை திருப்பிச் செலுத்த வேண்டியது தொடர்பான வழக்கில், விஜய் மல்லையாவுக்கு பிடியாணையையும் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், லண்டனில் தங்கியுள்ள விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டி இங்கிலாந்து தூதரகத்தில் முறைப்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக விகாஸ் ஸ்வரூப் தெரிவித்தார்.