இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ நேற்று, ‘பி.எஸ்.எல்.வி., – சி ௩௭’ ராக்கெட் மூலம்,104 செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி, புதிய சாதனை படைத்தது. இஸ்ரோ வரலாற்றில், இது புதிய மைல் கல்லாகும்.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான, ‘இஸ்ரோ’ வர்த்தக ரீதியாக, செயற்கை கோள்களை, விண்ணில் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘பி.எஸ்.எல்.வி., – சி 37’ என்ற ராக்கெட் மூலம், பூமி ஆய்விற்காக, இந்தியாவின், ‘கார்டோசாட் – 2’ செயற்கை கோளை, நேற்று, 9:28 மணிக்கு, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
இந்த செயற்கை கோளுடன், இந்தியா – 2, அமெரிக்கா – 96, இஸ்ரேல் – 1, கஜகஸ்தான் – 1, நெதர்லாந்து – 1, சுவிட்சர்லாந்து – 1, ஐக்கிய அரபு எமிரேடு – 1 என, ஏழு நாடுகளின், ௧௦௩ செயற்கை கோள்களும் செலுத்தப்பட்டன. இந்த ராக்கெட், விண்ணில் செலுத்தப்பட்ட, 17வது நிமிடத்தில், ‘கார்டோசாட் – 2’ செயற்கை கோள், பூமியில் இருந்து, 510 கி.மீ., உயரத்திலும், மற்ற செயற்கை கோள்கள், 18, 28வது நிமிடங்களில், 524 கி.மீ., உயரத்திலும் நிலை நிறுத்தப்பட்டன.