இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 1998-ம் ஆண்டு கடைசியாக நாடு தழுவிய அளவிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அன்றைய நிலவரப்படி, 18 கோடி மக்கள் அங்கு வாழ்வதாக கண்டறியப்பட்டது.
அதன் பின்னர், ராணுவ ஆட்சி, ஜனநாயக ஆட்சி மீண்டும் ஜனநாயக ஆட்சி என்று மாறிமாறி அமைந்ததனால் ஐந்தாண்டுகளுக்கும் ஒருமுறை நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு கடந்த 19 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.
இந்நிலையில், வரும் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரையிலும், ஏப்ரல் 25-ம் தேதி தொடங்கி மே 25 வரையிலும் அங்கு நாடு தழுவிய அளவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக 185 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த பணிக்கு அரசுப் பணியாளர்கள் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 918 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு உதவியாகவும், துணையாகவும் சுமார் 2 லட்சம் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என
பாகிஸ்தான் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மர்ரியும் அவுரங்கசிப் தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பின்போது, தவறான தகவல்களை அளிக்கும் பொதுமக்களுக்கு ஆறுமாத சிறைவாசம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
சுதந்திரத்துக்கு பின்னர் நமது நாட்டில் 15 முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றுள்ளது. கடைசியாக, 2010 – 2011-ம் ஆண்டுக்கு இடையில் நடைபெற்ற கணக்கெடுப்பின்படி, இந்தியாவில்121 கோடியே ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 422 மக்கள் வசித்து வருவதாக கண்டறியப்பட்டது.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து 14-8-1947 அன்று விடுதலை பெற்ற பாகிஸ்தானில் நடத்தப்படும் ஆறாவது மக்கள் தொகை கணக்கெடுப்பு இது, என்பது குறிப்பிடத்தக்கது.