ஈரானின் ஏவுகணை திட்டத்திற்கு எதிராகவும் அந்த நாடு பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறி ஈரான் மீது அமெரிக்கா புதிய தடைகளை அறிவித்துள்ளது.
இந்த புதிய நடவடிக்கைகளில் 18 நிறுவனங்கள் அல்லது தனி நபர்கள் பாதிக்கப்படுவதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த 18 தரப்புகளும் ஈரானின் ஏவுகணை திட்டம் அல்லது உயரடுக்கு குடியரசு பாதுகாப்பு படைப்பிரிவுக்கு உதவுவதாக அது குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் சிரிய அரசு மற்றும் ஹிஸ்புல்லா, ஹமாஸ் போன்ற குழுக்களுக்கு ஈரான் ஆதரவளிப்பது குறித்தும் அமெரிக்கா விமர்சனம் வெளியிட்டுள்ளது.
“பிராந்தியத்தில் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் சுபீட்சத்திற்கு பாதகமாக மத்திய கிழக்கெங்கும் ஈரானின் தீய செயல்கள் குறித்து அமெரிக்கா கவலையடைகிறது” என்று இராஜாங்க திணைக்களத்தின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த புதிய தடைகளுக்கு எதிராக பழிதீர்க்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இந்த தடைகள் ஒருபக்கச் சார்புடையவை மற்றும் சட்டவிரோதமானது என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் அறிவிப்பொன்று குறிப்பிட்டுள்ளது.