மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும், முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரன் அவர்களின் 11-வது நினைவு தினம் இன்றாகும். மலையக பெருந்தோட்டத்துறையில் நான்கு தசாப்த கால வரலாற்றைக் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு எதிராக மாற்று தலைமையொன்று முதன் முதலாக 1989இல் அறிவு சார்ந்த மலையக இளைஞர்களால் உருவாகியது. மலையகத்துக்குப் புதிய அரசியல் தலைமையை வழங்கினார் பெ.சந்திரசேகரன். மலையக மக்கள் மட்டுமல்லாது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்தவராக அவர் விளங்கினார்.
மலையக சமூகத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய தலைவர் அவர். சந்திரசேகரன் நான்கு தடவைகள் மலையக மக்கள் முன்னணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிகளின் கீழ் தேர்தலில் பெரும் வெற்றி பெற்று பிரதியமைச்சராக, அமைச்சராக பதவியேற்று மலையக மக்களுக்கு பெரும் பணியாற்றியவர்.
மலையக மக்கள் சமூக ரீதியாக எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போது, அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் மூலம் மலையக மக்களை ஒன்றிணைக்கும் சக்தியாகவும் அவர் விளங்கினார். அவர் முன்னின்று நடத்திய போராட்டங்கள் காரணமாக சிறை செல்ல நேரிட்டது.
தற்போது பேசப்படும் மலையக பல்கலைக்கழகம் என்ற கோரிக்கை 2005ஆம் ஆண்டிலேயே அவரால் அரசாங்கத்திடம் முன்வைக்கப்பட்டது. அக்காலத்தில் அவர் மலையக கல்வியியலாளர்களைக் கொண்ட சிந்தனை குழாம் ஒன்றை அமைத்து பல்வேறு வேலைத் திட்டங்களை தயாரித்தவர். உதாரணமாக மேலதிக பிரதேச சபைகள்,பிரதேச செயலகங்கள்,புதிய கிராம சேவகர் பிரிவுகளை ஏற்படுத்துதல், வறுமைக் கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கான சமுர்த்தி நிகழ்ச்சித் திட்டம், பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், அரச துறையில் புதிய வேலைவாய்ப்புகள் போன்ற வேலைத் திட்டங்கள் அன்னாரின் சிந்தனைகளில் வழிவந்தவையாகும்.
இன்று மிகப் பெரிய அளவில் பிரசித்தி பெற்றுள்ள ஏழு பேர்ச்சஸ் காணிகளுடனான தனிவீட்டுத் திட்டத்திற்கு வழிவகுத்தவர் அமரர் சந்திரசேகரன். தோட்ட வீடமைப்பு பொதுவசதிகள் பிரதி அமைச்சராக இருந்த 1995 – 1999 காலத்தில் ஏறத்தாழ 12000 வீடுகளை நிர்மாணித்தவர். தமது காலத்தில் ‘லயன்’ என்ற வார்த்தையை முற்றாக ஒழித்துக் கட்டுவதை நோக்காக கொண்டு அவர் செயற்பட்டார்.
அன்று முகவரியற்று இருந்த தொழிற்சங்கவாதிகள் பலருக்கு முகவரியை வழங்கினார். அரசியலில் பலரை ஏணியாக நின்று ஏற்றி விட்டவர் சந்திரசேகரன். மலையக மக்களின் மேம்பாட்டில் இந்தியா எப்போதும் உதவக் கூடும் என்ற அடிப்படையில் இந்திய மத்திய அரசுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டார். தமிழக அரசியல் கட்சி தலைவர்களுடன் நல்லுறவை பேணினார். இந்திய வீடமைப்புத் திட்டம் மலையக மக்களை நோக்கியும் விஸ்தரிக்கப்பட வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து அதற்கான வேண்டுகோளையும் முன்வைத்தார்.
தமிழ்க் கட்சிகள் மத்தியில் ஒற்றுமை வேண்டும் என்ற சிந்தனை கொண்டவர் அவர். மலையக சமூகத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் பற்றிய ஆழ்ந்த புரிந்துணர்வு அவரிடம் இருந்தது. நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சமத்துவமான அரசியல், சமூக, பொருளாதார உரிமைகளை பெற்று வாழ வேண்டும் என்ற சிந்தனையுடன் செயற்பட்டார்.
மத்திய மாகாண சபை உறுப்பினராக பணியாற்றி, 1994-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் மலையக மக்கள் முன்னணியின் மண்வெட்டி சின்னத்தில் போட்டியிட்டு 23,453 வாக்குகளை பெற்று பாராளுமன்றத்துக்கு அவர் தெரிவான போது அன்றைய அரசாங்கத்தை அமைப்பதில் ஒரு பிரதான சக்தியாக விளங்கினார்.
அவர் தோட்ட வீடமைப்பு, பொதுவசதிகள் பிரதி அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் மலையக சமூகத்திற்கான தனிவீட்டுத் திட்டத்தினை வெற்றிகரமாக நிறைவேற்றினார். அந்த வேலைத் திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது மகிழ்ச்சிக்குரியது.
அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை வகித்து வந்த போதும் தமிழ் மக்களுக்குப் பாதகமான வகையில் செயற்படுத்தப்படலாம் என்ற காரணத்தினால் அன்றைய அவசரகாலச் சட்டத்துக்கு ஆதரவளிப்பதிலிருந்து விலகி தனது மனச்சாட்சிக்கு இணங்கிச் செயற்பட்டார். வடக்கு, கிழக்கு தமிழ் மக்களும் சந்திரசேகரன் மீது மிக்க அன்பும், மரியாதையும் கொண்டிருந்தனர்.
2010 ஜனவரி 1ஆம் திகதியன்று அவரது திடீர் மரணச் செய்தியை அறிந்து வேதனைப்பட்டோர் ஏராளம்.
மலையக மக்கள் முன்னணியின் தலைவராக அவர் செயற்பட்ட இருபது ஆண்டு காலப் பகுதியில் அவரது இலட்சியப் பாதையில் இணைந்து பற்றுறுதி கொண்டு பயணித்தவர்கள் மிகப் பலர். யதார்த்த நடைமுறைக்கு ஒவ்வாத விமர்சனங்களை வீசியவர்கள் சமுதாயத்திலிருந்து ஒதுங்கிப் போனார்கள். இந்தக் காலப் பகுதிகளில் அவர் சந்தித்த சவால்கள் பல எனலாம். எதிர்கொண்ட சோதனைகள் இழப்புகள் அநேகம். அவற்றையெல்லாம் ஒரு தலைவனின் துணிவோடும், தீர்க்கதரிசனத்தோடும் அவர் வெற்றிகரமாகக் கையாண்டார். அந்த உயர்ந்த மனிதனின் மறைவு மலையக சமுதாயத்திற்கு மட்டுமல்ல முழு இலங்கைக்கும் பேரிழப்பாகும்.