செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா அங்கீகாரம் | திரைவிமர்சனம்

அங்கீகாரம் | திரைவிமர்சனம்

2 minutes read

அங்கீகாரம் – திரைப்பட விமர்சனம்

தயாரிப்பு : ஸ்வஸ்திக் விஷன்ஸ்

நடிகர்கள் : கே ஜெ ஆர், விஜி வெங்கடேஷ், சிந்தூரி, ரங்கராஜ் பாண்டே, வசுந்தரா, மன்சூர் அலிகான், ரமா, இசபெல்லா, அஜித் கோஷி மற்றும் பலர்.

இயக்கம் : தென்பாதியான்

மதிப்பீடு : 3.5/5

நயன்தாரா நடித்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர் கே ஜே ஆர்- தடகள விளையாட்டுப் போட்டியில் சாதிக்கும் மெய் வல்லுநர் கதாபாத்திரத்தில் கதையின் நாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘அங்கீகாரம்’. இந்த படத்திற்கு ரசிகர்களிடத்தில் உரிய அங்கீகாரம் கிடைக்குமா? கிடைக்காதா?  என்பதை தொடர்ந்து காண்போம்.

இந்தியாவின் முதன்மையான மாநகரங்களில் ஒன்றான சென்னையில்  தூய்மை பணியாளராக பணியாற்றுகிறார் பானுமதி. பொருளாதார ரீதியாக விளிம்பு நிலையில் வாழும் இவருக்கு ஆதிரன் – தங்கமயில் இரண்டு என இரண்டு பிள்ளைகள்.  இதில் ஆதிரன் தடகள விளையாட்டில் மெய் வல்லுனர் போட்டி பிரிவில் சாதித்து…. சர்வதேச அளவிலான பொது வலய அமைப்பு நடத்தும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி, தங்க பதக்கத்தை வென்று, தன் குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்ற லட்சியத்துடன் தன்னை தகுதிப்படுத்திக்கொண்டு மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பல தடைகளைக்கடந்து பங்கு பற்றி வருகிறார். தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில் தடகள பிரிவில் தேசிய சாதனையை சமன் செய்து வெற்றி பெறுகிறார். ஆனால் அவர் சர்வதேச விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்கு தெரிவு செய்யப்படவில்லை. இதனால் திறமையும், தகுதியும் இருந்தும் தமக்கு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் அல்லது பொது வலய அமைப்பு நடத்தும் சர்வதேச போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்கிறார். மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு எதிராக அவர் மனு தாக்கல் செய்திருப்பதால்… இந்த விவகாரம் தேசிய அளவில் கவனம் பெறுகிறது. இந்த வழக்கில் ஆதிரன் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பதையும், அவர் எதிர்பார்த்த அங்கீகாரம் அவருக்கு கிடைத்ததா? இல்லையா? என்பதையும் விவரிப்பது தான் இப்படத்தின் கதை.

விளையாட்டுத் துறையில் நடைபெறும் மோசடிகள் – முறைகேடுகள்-  அதிகார துஷ்பிரயோகம்-  மேல் தட்டு மக்களுக்கான நிபந்தனையற்ற ஆதரவு- விளம்பரதாரர்களின் எதிர்பார்ப்பு- விளையாட்டுத்துறை அதிகாரிகளின் அலட்சிய மற்றும் ஆதிக்க மனப்பான்மை – துடுப்பாட்டத்திற்கு வழங்கப்படும் அதீத முக்கியத்துவம் வேறு விளையாட்டுகளுக்கு வழங்கப்படாத யதார்த்த நிலை- மண் மைதானம் – செயற்கை தரை மைதானம்- மைதானத்தில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு இடையேயான பாகுபாடு- விளையாட்டுத்துறை அதிகாரிகளின் பாலியல் அத்துமீறல்- என விளையாட்டுத் துறையில் இன்று நடைபெற்று வரும் அனைத்து அரசியலையும்.. தெளிவாகவும், துணிச்சலுடனும் இயக்குநர் விவரித்திருப்பதற்கு முதலில் பாராட்டை தெரிவிக்கலாம்.

பொதுவாக ஸ்போர்ட்ஸ் டிராமா ஜேனரிலான படைப்புகளில் காணப்படாத பல அம்சங்கள் இதில் உள்ளதை அவசியம் குறிப்பிட வேண்டும். விளையாட்டு துறையில் நடைபெறும் பல்வேறு அரசியல் காரணமாக திறமையான விளையாட்டு வீரர்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள்? எந்த அளவிற்கு பாதிக்கப்படுகிறார்கள்? என்பதை நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கிறது.

உச்சகட்ட காட்சி- அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற ‘பெத்தி’ படத்தினை நினைவு படுத்தினாலும்.. இதில் சொல்லப்பட்டிருக்கும் விடயமும்.. பார்வையும்.. வேறு.

தடகள விளையாட்டில் ஈடுபட்டு தங்கப் பதக்கத்தை வென்று விட்டால். தங்களுடைய வாழ்க்கையின் தடம் மாறிவிடும் என்ற நம்பிக்கையில் விளையாடும் சாமானிய வீரனுக்கு… தகுதி இருந்தும், திறமை இருந்தும் வாய்ப்புகள் மறுக்கப்படுவதும்… அதற்காக அவர்கள் சோர்வடையாமல் .. மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதும்… விளையாட்டு வீரர்களுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறது.

ஆதிரன் எனும் கதாபாத்திரத்தை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர். அதிலும் இரண்டாம் பாதியில் ஆதிரன் நீதிமன்றத்தில் முன்வைக்கும் வாதங்களுக்கான உரையாடல்கள்… கவனிக்கத்தக்கதாக இருக்கிறது.

முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் ரசிகர்களுக்கான படமாளிகை அனுபவம் சில தருணங்களில் கிடைக்கிறது. அத்துடன் பார்வையாளர்கள் கதையுடன் எளிதாக இணைத்துக் கொள்ள முடிகிறது. இந்த மேஜிக்கை நிகழ்த்திய இயக்குநர்- ஒளிப்பதிவாளர்- கலை இயக்குநர்- இசையமைப்பாளர் – படத்தொகுப்பாளர்- உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் பாராட்டுகள்.

ஆதிரன் கதாபாத்திரத்தில் அசலான மெய் வல்லுநராக தோன்றும் தயாரிப்பாளர் கே ஜே ஆர்-  அதற்காக அவர் மேற்கொண்ட உடல் சார்ந்த முயற்சிகளுக்கும்…பயிற்சிகளுக்கும்..  சல்யூட். ஆனால் எமோஷனல் காட்சிகளில் நடிக்க தடுமாறுகிறார்.

தூய்மை பணியாளர் பானுமதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ரமாவின் அனுபவமிக்க நடிப்பு பிரமாதம்.

ஏ ஜி ஆண்டாள் எனும் நீதிமன்றத்தில் ஆஜராகும் மூத்த அரசாங்க சட்டத்தரணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை விஜி வெங்கடேஷ் பொருத்தமான தேர்வு  நடிப்பிலும் அசத்துகிறார்.

அங்கீகாரம் – விளையாட்டு அரசியலுக்கான சாட்டை.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.