மோகன்லால், மீனா நடித்த ‘‘திரிஷ்யம்’’ மலையாளத்தில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. தெலுங்கில் இப்படம் ரீமேக் செய்யப்பட்டது. வெங்கடேஷ், மீனா ஜோடியாக நடித்தனர். அங்கும் இப்படம் ஹிட்டானது.
இதையடுத்து தமிழிலும் திரிஷ்யம் படத்தை கமல், கவுதமி ஜோடியாக நடிக்க பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டனர். இங்கும் வெற்றிகரமாக ஓடி வசூல் குவிக்கிறது.
இந்தியில் அஜய் தேவ்கான், ஸ்ரேயா ஜோடியாக நடிக்க திரிஷ்யம் படத்தை ரீமேக் செய்துள்ளனர். இந்தியா முழுவதும் வருகிற 31–ந்தேதி இப்படம் ரிலீசாகிறது. இந்தியிலும், திரிஷ்யம் ஹிட்டாகுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மோகன்லால், கமல் படங்களை இந்தி திரிஷ்யம் மிஞ்சுமா என்று அஜய்தேவ்கானிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர் ‘கமலஹாசனும் மோகன்லாலும் திரையுலக மேதைகள். அவர்கள் இருவரும் பல வருடங்களாக சினிமாவில் இருக்கிறார்கள். நிறைய சாதனைகளையும் செய்துள்ளனர். கமல், மோகன்லால் அளவுக்கு இல்லா விட்டாலும் இந்தி திரிஷ்யம் படத்தில் என்னால் முடிந்த அளவுக்கு சிறப்பாக நடித்துள்ளேன்’ என்றார்.