செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா கிராமங்களில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே படமாக்கினால் அதுதான் உலகப் படம் | இயக்குநர் வசந்தபாலன்

கிராமங்களில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே படமாக்கினால் அதுதான் உலகப் படம் | இயக்குநர் வசந்தபாலன்

1 minutes read

கிராமங்களில் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை அப்படியே படமாக்கினால் அதுதான் உலகப் படம் என, சனிக்கிழமை இரவு கம்பம் உலகத் திரைப்பட விழாவில் பங்கேற்ற தமிழ் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன் பேசினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தின் நிழல் திரைப்பட சங்கம் சார்பில், கம்பம் அமராவதி தியேட்டரில் உலகத் திரைப்பட விழா கடந்த 28 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற்றன.
விழாவில், இந்தியா, சீனா, போலந்து, ரஷ்யா உள்ளிட்ட 9 நாடுகளைச் சேர்ந்த 16 மொழி திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
விழாவின் 2 ஆவது நாளான சனிக்கிழமை இயக்குநர் தாமிரா இயக்கத்தில் உருவான மெஹர் திரைப்படம், போலந்து நாட்டைச் சேர்ந்த கேமரா பப், மலையாளப் படமான ஆதாமிண்ட மகன் அபு, அமெரிக்கப் படமான சாப்ளின் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன.
பின்னர் இரவு நடந்த விழாவில், இச்சங்கத்தின் மாநிலச் செயலர் எஸ். கருணா தலைமை வகித்தார். திரைப்பட நடிகர் கவிஞர் ஜோ. மல்லூரி, வசனகர்த்தா சுருளிப்பட்டி சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், சிறப்பு விருந்தினராக இன்று நேற்று நாளை திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், ரெட்டை சுழி படத்தை இயக்கிய தாமிரா, அங்காடித் தெரு இயக்குநர் வசந்தபாலன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, இயக்குநர் ரவிக்குமார் பேசுகையில், தமுஎகச.வின் உந்துதல் காரணமாக 2004 ஆம் ஆண்டில் குறும்படம் எடுத்தேன். அது வெற்றியைத் தந்தது. தற்போது, என்னுடைய முதல் திரைப்படமும் வெற்றியைத் தந்துள்ளது. வணிக நோக்கத்துக்காக மோசமான திரைப்படத்தை இயக்கமாட்டேன். இன்னும், என்னுடைய சொந்த ஊரான திருப்பூரில் தான் இருக்கிறேன் என்றார்.
இயக்குநர் தாமிரா பேசுகையில், தேனியில் தான் என் சினிமா வாழ்க்கை தொடங்கியது. மெஹர் திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இஸ்லாமிய சமுதாயப் பெண் தனது மகளின் திருமணத்துக்காக படும் கஷ்டமே இப்படத்தின் மையக் கரு. இப்படத்தை பார்த்த பல இளைஞர்கள், வரதட்சணை வாங்கமாட்டேன் எனக் கூறும்போது, படம் வெற்றி பெற்றதாகக் கருதுகிறேன் என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், எந்த ஒரு சினிமா, ரசிகனை தூங்கவிடாமல் செய்கிறதோ, அதுதான் உலக சினிமா. உலகத்தில் தோல்வி அடைந்தவனை பற்றி சிறுகதை, நாவல், திரைப்படம் இல்லை. வெயில் படத்தில் தோல்வி அடைந்தவனைப் பற்றி எடுத்தேன், வெற்றி அடைந்தேன். அடித்தட்டு மக்களின் துன்பம், வலி, அவர்களின் அரசியல் குறித்தே எனது படம் இருக்கும். சென்னையில் பார்த்த உலக திரைப்படங்களே வெயில், அங்காடித் தெரு போன்ற படங்களை எடுக்கக் காரணமாக இருந்தது.
சென்னையில் இருந்தால் இரண்டு வகையான கதைகள் தான் கிடைக்கும். ஆனால், கிராமங்களில் தான் கதைகள் கொட்டிக் கிடக்கின்றன. அதை அப்படியே படமாக்கினால், அதுதான் உலகப் படம் என்றார்.
விழாவில், தமிழ்மணி, அபுதாகீர் உள்பட ஏராளமான எழுத்தாளர்கள், கலைஞர்கள் கலந்துகொண்டனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.