நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 87–வது பிறந்தநாள் விழா நாளை மறுநாள் (1–ந் தேதி) கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி, சென்னை மியூசிக் அகாடமியில் வருகிற வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு சிவாஜி விருது வழங்கும் விழா நடைபெறுகிறது. டோஹா வங்கி முதன்மை செயல் அதிகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நினைவு பரிசு மற்றும் விருதுகளை வழங்குகிறார்.
இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், நடிகைகள் ஊர்வசி சாரதா, குசலகுமாரி, நடிகர் டைப்பிஸ்டுகோபு, பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி ஆகியோருக்கு டாக்டர் சிவாஜி கணேசன் நினைவு பரிசு வழங்கப்படுகிறது.
சிவாஜி ரசிகர் மன்ற மூத்த உறுப்பினர்களான சென்னையை சேர்ந்த டி.வி.சந்திர சேகரன், பெங்களூரைச் சேர்ந்த மா.நடராஜ் ஆகியோருக்கு நடிகர் திலகம் விருது வழங்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை ராம்குமார், நடிகர் பிரபு ஆகியோர் செய்து இருக்கிறார்கள்.