Wednesday, April 24, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி கார்த்திக் எனும் மவுனப் புயல் | சந்திரமோகன் வெற்றிவேல்

கார்த்திக் எனும் மவுனப் புயல் | சந்திரமோகன் வெற்றிவேல்

6 minutes read

மதங்களைக் கடந்த காதலுக்கு வாழ்த்து சொன்ன ‘அலைகள் ஓய்வதில்லை’ படம் வெளியாகி 40 ஆண்டுகள் ஆகிவிட்டன. ‘நிழல்கள்’ படத்தின் தோல்விக்குப் பின் ஒரு வெற்றிப் படத்தைத் தரும் முனைப்புடன் உணர்வுபூர்வமான அந்தக் காதல் கதையை உருவாக்கிய பாரதிராஜா, அதன் வழியே கார்த்திக் எனும் மகா கலைஞனை நமக்குப் பரிசளித்தார். தனது 40 ஆண்டுகாலத் திரைப் பயணத்தில் தனது அபாரக் கலைத் திறனை வெளிப்படுத்தியதுடன், நம் திரை ரசனையையும் வளர்த்தெடுத்திருக்கிறார் கார்த்திக். ஒரு நடிகராக கார்த்திக்கின் சாதனைகளை நினைவுகூர இந்தத் தருணம் மிகப் பொருத்தமானது.

வசந்தகால வருகை

‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தின் துறுதுறுப்பான இளைஞன் பாத்திரத்துக்குப் பொருத்தமான முகம் தேடி அலைந்துகொண்டிருந்த பாரதிராஜா, நடிகர் முத்துராமனின் வீட்டில் பேட்மின்டன் ஆடிக்கொண்டிருந்த அவரது மகன் முரளியைக் கண்டதும் பரவசமடைந்தார். பைலட் ஆக வேண்டும் எனும் கனவில் இருந்த முரளி, பாரதிராஜாவின் பார்வை பட்டதும் கார்த்திக் எனும் பெயரில் நடிகராக அவதாரம் எடுத்தார். வசீகரமான அந்த இளைஞனின் வருகை தமிழ் சினிமாவின் வசந்தகாலமான 80-களுக்கு மேலும் செழுமை சேர்த்தது.

முதல் படமே மாபெரும் வெற்றி. தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்பட்டு அங்கும் வெற்றிமாலை விழுந்தது. முரளி எனும் சொந்தப் பெயரிலேயே தெலுங்கில் நடித்தார் கார்த்திக். ஆனால், அடுத்த சில மாதங்களிலேயே தந்தை முத்துராமன் மறைந்துவிட, வழிகாட்ட யாருமின்றி தடுமாறினார். அதன் பின்னர், 1982-ல் ஸ்ரீதரின் ‘நினைவெல்லாம் நித்யா’ படம்தான் அவரது பெயர் சொல்லும் படமாக இருந்தது. பாரதிராஜாவே மீண்டும் அவரை வைத்து இயக்கிய ‘வாலிபமே வா வா’ படமும் மோசமான விமர்சனங்களைச் சந்தித்தது. அந்தக் காலகட்டத்தில் விசுவின் படங்களில் குடும்பப் பாங்கான(!) பாத்திரங்களில் நடித்துவந்தார் கார்த்திக். சுரேஷ், அர்ஜூன் போன்ற நடிகர்களுடனும் அவர் இணைந்து நடித்தார். ரஜினி நடித்த ‘நல்லவனுக்கு நல்லவன்’ படத்தில் எதிர்மறையான பாத்திரம் கிடைத்தது. வில்லன் எனும் முத்திரை விழுந்துவிடுமே எனும் தயக்கத்துடன் இருந்தவருக்கு, “அடுத்து நாயகனாக இன்னொரு படம் நடிக்கலாம்” என ஏவிஎம் நிறுவனம் உத்தரவாதம் தந்தது. ‘நல்லதம்பி’ எனும் அந்தப் படமும் கார்த்திக்குக்குப் பெரிய பெயரைப் பெற்றுத் தந்துவிடவில்லை. ‘அன்வேஷனா’ (தெலுங்கு) போன்ற ஓரிரு படங்கள் கைகொடுத்தன.

மவுனப் புயல்

இப்படியான ஒரு சூழலில், ‘மவுனராகம்’ படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கார்த்திக் வீட்டின் கதவைத் தட்டியது. நம்பிக்கையளிக்கும் இயக்குநராக வளர்ந்துகொண்டிருந்த மணிரத்னம் விவரித்த அந்தப் பாத்திரம், கார்த்திக்கின் மனதைத் தொட்டது. நடிக்கச் சம்மதித்தார். மனோகர் எனும் அந்தப் பாத்திரம், அதுவரையிலான நாயக பிம்பங்களைக் குலைத்துப் போட்டது. நிதான வேகத்தில் நகரும் அந்தப் படத்தில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகவே வரும் அந்தப் பாத்திரம், புயலடித்து ஓய்ந்ததைப் போன்ற உணர்வைத் தந்தது. கார்த்திக்கின் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனை அது.

அதன் பின்னர், ‘வண்ணக் கனவுகள்’ படம் அவருக்குப் பெயர் பெற்றுத் தந்தது. மணிரத்னத்தின் ‘அக்னி நட்சத்திரம்’ கல்ட் அந்தஸ்தை அடைந்தது. ‘வருஷம் 16’, ‘கிழக்கு வாசல்’, ‘பாண்டிநாட்டு தங்கம்’ என பல ஹிட் படங்கள் அவருக்கு அமைந்தன. 90-களில் தமிழ்த் திரையின் முகம் மாறிய பின்னரும்,  ‘உள்ளத்தை அள்ளித்தா’, ‘மேட்டுக்குடி’, ‘பிஸ்தா’, ‘அரிச்சந்திரா’ என ஈடுகொடுத்து நடித்தார். புதியவர்களுடனும் இணைந்து நடிக்க அவர் தயங்கவில்லை. இதோ தனுஷ் நடித்த ‘அனேகன்’, சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ வரை நடித்துவிட்டார். இப்போதும் ‘அந்தகன்’, ‘தீ இவன்’ போன்ற படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

துடிப்பின் வடிவம்

கல்லூரி முடித்த கையோடு திரைத் துறைக்குள் நுழைந்த கார்த்திக், அந்த வயதுக்கே உரிய துறுதுறுப்புடனும், நட்புணர்வுடனும் இருந்தார். அதுவே அவரது கதாபாத்திரங்களின் உள்ளீடாக அமைந்தது. ‘மவுனராகம்’ படத்தில் துடிப்பும் துள்ளலுமாக அவர் நடித்த பாத்திரம் இன்றுவரை பல நடிகர்களின் உற்சாக நடிப்புக்கு மூலாதாரமாக இருக்கிறது.

மணிரத்னத்தின் முதல் படமான ‘பல்லவி அனுபல்லவி’ (கன்னடம்) அனில் கபூர் நடித்த பாத்திரத்தின் நீட்சிதான் ‘மவுனராக’த்தின் மனோகர் பாத்திரம். கன்னடப் படத்திலும் நாயகியுடன் திறந்தவெளி ரெஸ்டாரன்டில் நாயகன் காஃபி சாப்பிடும் காட்சி உண்டு. ஆனால், கார்த்திக்கிடம் இயல்பாகவே வெளிப்படும் குறும்பு அந்தப் பாத்திரத்தைக் காவியத் தன்மை கொண்டதாக மாற்றியது. ‘மிஸ்டர் சந்திரமவுலி’ என்று குறும்பும் விஷமமுமாக திவ்யாவின் (ரேவதி) தந்தையைக் கூவி அழைக்கும் உற்சாகம் வேறு யாருக்கு வரும்? தனக்குள் இருக்கும் குழந்தைமையைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் கார்த்திக், அதுவே தனது கலை வெளிப்பாட்டின் ஊற்றாக இருப்பதாகவும் கருதுகிறார். அதுதான் இப்படியான பாத்திரங்களில் அவரை மிளிரச் செய்தன.

சுயம்புக் கலைஞன்

‘காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்களில் எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத பாத்திரங்களில் நடித்தவர் முத்துராமன். கார்த்திக்கிடம் வெளிப்படும் அபரிமிதமான துறுதுறுப்புக்கு, அவர் தந்தையின் நடிப்பே மூலமாக இருந்திருக்க வேண்டும். மற்றபடி, தன் தந்தையிடமிருந்து மட்டுமல்ல, வேறு எந்த நடிகரிடமிருந்தும் நடிப்பின் சாயலை அவர் கைகொள்ளவில்லை.  மாறாக, அவரது நடிப்பை இன்றுவரை பலரும் பிரதியெடுக்கிறார்கள். இன்று உச்ச நடிகர்கள் உட்பட பலரிடம் கார்த்திக்கின் உடல்மொழியை, உச்சரிக்கும் விதத்தைப் பார்க்க முடியும்.

முத்துராமனுக்குத் திரையுலகம் வழங்கிய ‘நவரசத் திலகம்’ பட்டத்தின் நீட்சியாக, கார்த்திக்குக்கு ‘நவசர நாயகன்’ பட்டம் வழங்கப்பட்டிருக்கலாம்.  ஆனால், அந்தப் பட்டத்துக்கு நியாயம் சேர்க்கும் வகையில் அற்புதமான கலைவெளிப்பாட்டைக் கார்த்திக் நிகழ்த்திக்காட்டினார். காட்சியின் தன்மையை, வசனத்தின் வீச்சை ஆழமாக உள்வாங்கிக்கொண்டு, கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை அதன் போக்கில் வெளிப்படுத்தும் திறன் அவரிடம் உண்டு. இயக்குநர்களின் பாணிக்கு, இயங்குமுறைக்குத் தன்னை ஒப்புக்கொடுக்கும் மனதும், அதை மெருகேற்ற தன்னாலான முயற்சிகளை மேற்கொள்ளும் அணுகுமுறையும் அவரது நடிப்புத்திறனை மென்மேலும் பிரகாசிக்கச் செய்தன.

கனவான் தன்மை

திரையில் தன்னுடன் நிற்பவர்களையும் கடந்து ரசிகர்களைத் தன் மீது குவியச் செய்யும் ஈர்ப்புசக்தி கார்த்திக்கிடம் அபரிமிதமாகக் குவிந்திருந்தது.

கார்த்திக்கின் பிரத்யேகச் சிறப்பு அவர் உடையணியும் பாங்கு. வெள்ளைச் சட்டையும், வெளிர் பழுப்பு நிற பேன்டுமாக பெல்ட்கூட அணியாமல் அவரால் தன் தோற்றப் பொலிவை வெளிப்படுத்திவிட முடியும். கிராமியப் படமென்றால், பேன்ட்டின் ஒரு காலைச் சற்று அதிகமாக மடித்துவிட்டுக்கொண்டால் போதும். அவரது இயல்பான வசீகரத் தோற்றம் இவை அனைத்துக்கும் கைகொடுத்தது.

எதிராளியின் பலவீனங்களை, வன்மத்தை, ஏன் கீழ்மையைக்கூட பொருட்படுத்தாது சகஜமாகக் கடக்கும் கனவான் தன்மை அவர் நடித்த பல பாத்திரங்களில் அமைந்திருந்தது. அவரது இயல்பான குணத்தை ஒட்டியே அப்படியான பாத்திரங்களும் அமைந்தன. அகத்தியனின் ‘கோகுலத்தில் சீதை’ மிகச் சரியான உதாரணம். ஏமாற்றங்களை உள்ளுக்குள் செரித்துக்கொண்டு, புன்னகையை முகத்தில் ஏந்தியபடி வாழ்க்கையைத் தொடரும் பாத்திரங்கள் கார்த்திக்கின் நடிப்புக்குக் கனம் சேர்த்தன. ‘வருஷம் 16’, ‘கிழக்கு வாசல்’, ‘தொட்டாச்சிணுங்கி’ போன்ற படங்களை உதாரணமாகச் சொல்லலாம்.

தாமதமும் ஈடுபாடும்

“ஏன் லேட்?” என்பதுதான் கார்த்திக் பேசிய முதல் வசனம். பின்னாட்களில் படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவதாகக் கார்த்திக் மீது புகார்கள் எழுந்தது விசித்திரமான பொருத்தம். தன்னைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பாரதிராஜா உட்பட பல இயக்குநர்களை, தயாரிப்பாளர்களை செட்டில் காக்க வைத்தவர் கார்த்திக். கால்ஷீட்டில் சொதப்புபவர் என்றே திரைத் துறையில் அவர் மீதான பிம்பம் கட்டமைக்கப்பட்டுவிட்டது. எனினும், தனக்கான நியாயங்களைச் சொல்லி அந்தப் புகார்களை அவர் சிரித்தபடி கடந்துவிடுகிறார். இதுபோன்ற நடவடிக்கைகள் அவர் அடைந்திருக்க வேண்டிய உயரத்திலிருந்து அவரை விலக்கி வைத்தன எனப் பலரும் வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்கள்.

அதேசமயம், தன் ஆன்மாவைத் தொடும் கதாபாத்திரம் என்றால், தன்னை அதில் கரையைவிட்டு அதன் உச்சம் தொட்டுக் காட்டும் உத்வேகம் அவருக்குள் துளிர்விடும். தாமதம் குறித்த புகார்கள் இருந்த காலத்திலேயே ‘கோகுலத்தில் சீதை’ போன்ற படங்களில் அந்த ஈடுபாட்டை அவர் வெளிப்படுத்தினார். ‘அனேகன்’ படத்தில் அவரை ஒப்பந்தம் செய்யத் தயங்கிய கே.வி.ஆனந்த், பின்னர் படத்தில் அவர் காட்டிய ஈடுபாடும் ஒத்துழைப்பும் தன்னைப் பிரமிக்கவைத்ததாக ஒப்புக்கொண்டார். அதுதான் கார்த்திக். ஒரு விஷயம் தன் மனதைத் தொட்டுவிட்டால் அதற்காக எதையும் விட்டுக்கொடுக்க அவர் தயங்கமாட்டார். தன் நடிப்பு மீதான விமர்சனங்களுக்கு மதிப்பளிப்பவர். அவரே ஒரு சுயவிமர்சகர். தன் மீது ஒளிவட்டங்கள் விழுவதை ஏற்காதவர். சுயபகடி செய்துகொள்ளும் அளவுக்குப் பெருந்தன்மையானவர். நகைச்சுவைத் திறன் இயல்பாகவே அவருக்கு வாய்த்திருந்தது. ‘உள்ளத்தை அள்ளித்தா’ எனும் வெற்றிப் படைப்புக்குப் பின்னர் சுந்தர்.சி அவரை வைத்து ஐந்து படங்கள் இயக்கியதே அதற்கு சாட்சி!

சொந்த வாழ்க்கையில் பல சரிவுகளை, ஏமாற்றங்களை, துரோகங்களைச் சந்தித்தவர் கார்த்திக். அவர் மீதும் நிறைய புகார்கள் உண்டு. அவரது அரசியல் வாழ்க்கை ஒருபோதும் கவனத்துக்குரியதாக இருந்ததில்லை.

இவை அனைத்தையும் கடந்து திரையுலகின் நவசர நாயகன் எனும் சிம்மாசனத்தில் புன்னகையுடன் வீற்றிருக்கிறார். அவரது கலை அனுபவத்தை இன்றைய திரையுலகம் முறையாகப் பயன்படுத்திக்கொண்டால், இன்னும் சில அழகிய தருணங்கள் தமிழ் சினிமாவுக்குக் கிடைக்கும்!

செப்டம்பர் 13 – கார்த்திக் பிறந்தநாள்

-சந்திரமோகன் வெற்றிவேல்

கட்டுரையாளர் சந்திரமோகன், தமிழ்நாட்டின் பிரபல ஓவியர். கலை இலக்கிய ரசனை எழுத்துக்களையும் எழுதி வருகிறார்.

நன்றி – காமதேனு இதழ்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More