Friday, March 29, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமாகவர் ஸ்டோரி பாடகர்களின் பாடகன் எஸ்பிபி | வெ. சந்திரமோகன்

பாடகர்களின் பாடகன் எஸ்பிபி | வெ. சந்திரமோகன்

3 minutes read

எஸ்.பி.பியின் இழப்பு தந்த வலியிலிருந்து நம்மில் பலரால் இன்னமும் வெளிவர முடியவில்லை. இந்த நிமிடம்வரை எங்கேனும் ஒருவர், ‘பக்கத்தில் நீயும் இல்லை…’ எனும் பாடல் வரியைக் கேட்டு உடைந்து அழுதுகொண்டிருப்பார். ‘தங்கத்துக்கு வேறு மாற்று உண்டா கூறு…’ எனும் பாடல் பின்னணியில் ஒலிக்க எஸ்.பி.பியின் இறுதிச் சடங்குகளை நேரலையில் பார்த்த எத்தனைக் கண்களில் நீர் திரையிட்டது!

ஒரு கலைஞனின் மரணத்துக்கு, ஒரு சமூகம் ஏன் இவ்வளவு கண்ணீர் சிந்துகிறது? அவருடன் நேரடியான தொடர்பு ஏதும் இல்லாவிட்டாலும், நம் வீட்டில் நிகழ்ந்த இழப்பைப்போல் ஏன் இத்தனைத் துக்கம்? மனிதர்கள் இப்படி மொத்தமும் உடைந்து கதறி அழுது நின்ற காட்சியைச் சமீபத்தில் நாம் பார்த்ததில்லையே? பெருந்தொற்று அச்சத்தையும் மறந்து, அந்த மனிதரின் முகத்தை கடைசியாகப் பார்த்துவிட வேண்டும் என்று ஆயிரக்கணக்கானோரை உந்தித் தள்ளியதே, அந்த உணர்வின் தர்க்கம் என்ன? எல்லா கேள்விகளுக்கும் ஒரே விடைதான். நம்முடையவராக அல்ல, நாமாகவேதான் இருந்தவர் எஸ்.பி.பி.

தருணங்களின் துணைவர்

மனதுக்குள் பொங்கிப் பிரவகிக்கும் காதலைச் சொல்ல வார்த்தைகளைத் தேடுபவர்களுக்கு எஸ்.பி.பி. பாடிய ஒரு பாடலேனும் துணையாக வந்திருக்கும், தூது சென்றிருக்கும். அவரது பாடலைப் பாடி காதலை வெளிப்படுத்திய ஆண்கள், நிச்சயம் தங்கள் காதலிகளின் மனதில் இடம்பிடித்திருப்பார்கள். காதல் கைகூடாவிட்டாலும் மனதின் ஓரத்தில், நினைவுகளின் பின்னணி இசையாகவேனும் அவரது பாடல் இன்றும் தங்கியிருக்கும்.

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும்போதும் முன்பின் அறிமுகமே இல்லாதவர்களுடன் கைகுலுக்கி கட்டியணைத்துக்கொள்ளும் உற்சாகக் கணத்தின் பின்னணியில், ‘இளமை இதோ இதோ…’ என்று இன்னிசையாக முழங்கிக்கொண்டிருப்பார் எஸ்.பி.பி. இன்னும் எத்தனை ஆண்டுகள் பிறந்தாலும், தமிழர்களுக்கு அதுதான் புத்தாண்டு விடியல் பாடல். 30 ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தையாக இருந்தவர்களை ‘ஆயர்பாடி மாளிகையில்’ பாடல் மூலம் தாலாட்டித் தூங்கவைத்த அதே குரல், இன்றைக்கு அவர்களது குழந்தைகளையும் அதே இனிமையுடன் வருடித் துயிலச் செய்கிறதே! தோல்வியில் சோர்ந்து நிற்பவரைத் தட்டியெழுப்பி, ‘வெற்றி நிச்சயம்… இது வேத சத்தியம்’ என வேகம் கொள்ளச் செய்கிறதே! எஸ்.பி.பி. என்பவர் நாமேதானே!

பாடகர்களின் பாடகன்

இன்றும் மேடைக் கச்சேரிகளில் அதிகம் பிரதியெடுக்கப்படும் குரலாக எஸ்.பி.பியின் குரல்தான் இருக்கிறது. ‘சங்கீத ஜாதி முல்லை’ பாடலை அதே உணர்வுடன் பாடத் தெரிந்திருந்தால், அந்தப் பாடகனுக்குக் கிடைக்கும் மரியாதையே தனி. கைவிட்டுப் போன காதலின் வலியையும், ஆதரவற்று அலையும் ஆன்மாவின் அலறலும் கலந்த குரலில் தொடங்கும் ஆலாபனை ஒன்றே போதும். உச்சம் தொட்டுக் கரைவதும் பின்னர் உயர்வதுமாக அது நம்மை உலுக்கியெடுத்துவிடும். வைரமுத்துவின் வார்த்தைகளுடன் பின்னர் தொடரும் பாடல், அந்த உணர்வுத் தொகுப்பின் பின்னிணைப்புதான்.

அப்படியான ஒரு பாடலை எஸ்.பி.பி.யைப் போன்றே இன்றுவரை யாரும் பாடிவிடவில்லைதான். ஆனால், அவரது குரலில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை எட்டியிருந்தாலே, அந்தப் பாடகன் அங்கீகாரத்தின் உச்சத்தைத் தொட்டுவிடுவான். கல்லூரிப் போட்டிகளில் ‘ஓ பட்டர்ஃபிளை..’ பாடியவர்கள் தரையிலிருந்து ஓரிரு அங்குலங்கள் மேலே நடப்பவர்களாகவே தெரிவார்கள்.

தான் பாடிய பாடல்களை இசை நிகழ்ச்சிகளில் பாடுபவர்களிடம் எஸ்.பி.பி. காட்டும் பெருந்தன்மையையும் பேரன்பையும் மறந்துவிட முடியுமா? அவருக்குத் தெரியும், அவரைப்போல் இன்னொருவர் பாடிவிடவே முடியாது என்று. ஆனால், பாடலில் அவர் செய்த நுணுக்கமான சங்கதிகளை ஒருவர் உள்வாங்கிப் பாடிவிட்டால், உச்சிகுளிரக் கொண்டாடிவிடுவார். பாடியது ஒரு குழந்தையாக இருந்தால் கதகதப்பான அணைப்பும் நெற்றியில் ஒரு முத்தமும் நிச்சயம்!

மாயங்களின் குரல் வடிவம்

‘காலை நேரப் பூங்குயில்’ (அம்மன் கோயில் கிழக்காலே) பாடலின் தொடக்கத்தில் எஸ்.பி.பி. பாடும் ஆலாபனை வெறும் குரல் பதிவு மட்டுமா என்ன? தாம்பத்ய உறவின் சிடுக்குகளைக் கடந்து, தனது மனைவியின் மனதை வருடிச் செல்லும் தென்றலின் குரல் வடிவமல்லவா அது? ‘புதிய கவிதை புனையும் குயிலே… நெஞ்சில் உண்டான மாயம் என்ன?’ என்று மனைவி முன்னால் பாடியவர்கள் எத்தனைத் தவறுகளுக்குப் பின்னாலும் மன்னிக்கப்பட்டிருக்கிறார்கள் தெரியுமா?

காதலில் கசிந்துருகும் இளைஞனாக, போர் முரசு கொட்டும் போராளியாக, உறவுகளின் இழப்பைத் தாங்க முடியாமல் புலம்பும் மனதாக, காதலி/ மனைவியுடனான ஊடலுக்கு முடிவுகட்ட முயலும் மனிதர்களின் குரல் பிரதியாக என… எத்தனையோ பாடல்களின் வடிவில் நம்மைப் பிரதிநிதித்துவம் செய்திருக்கிறார் எஸ்.பி.பி. எல்லாமே திரைப்படங்களின் கதைச் சூழலுக்கேற்ப உருவாக்கப்பட்ட பாடல்களுக்கான பங்களிப்புதான். ஆனால், ஒரு துளிகூட வற்றிவிடாத ஜீவனுடன் அவர் பாடிய பாடல்கள், நம் ஆன்மாவில் அல்லவா கலந்திருக்கின்றன. அவர் எப்படி நம்மிடமிருந்து வெளியேறிவிட முடியும்?

வெ. சந்திரமோகன், தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஓவியர் மற்றும் பத்திரிகையாளர்.

நன்றி | தமிழ் இந்து (தமிழ்நாடு)

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More