கற்பனைக்கு மிஞ்சிய நடிப்பு சிவாஜிகணேசன் | பால.சுகுமார்

சிவாஜிகணேசனின் பிறந்த நாள் – 01.10.2021

நடிப்பு பற்றி உலகில் பல கோட்பாடுகள் உருவாகியுள்ளன.தொல்காப்பியர் முதல் இன்று வரை நடிப்பு பற்றியதான வரைவிலக்கணங்களின் அடிப்படை கற்பனை என்ற மையப் புள்ளியயையே தொட்டு நிற்கிறது.

நாட்டிய சாஸ்திர ஆசிரியர் சொல்லுகின்ற நாட்டிய தர்மி,லோக தர்மி,தொல்காபியம் சொல்லும் நாடக வழக்கு,உலகியல் வழக்கு நவரசம்,சுவைகள் மெய்ப்பாட்டியல் ,அபினயக் கோட்பாடுகள் அரிஸ்ரோற்றில் சொல்லும் கதாசிஸ் ரஜடி என நீளும் தொல்சீர் மரபு வழியான நடிப்பு பற்றித எண்ணக் கருக்கள்.

நவீன நடிப்பு கோட்பாடுகளான மேயர்கோல்டின் உடற்பொறிமுறை நடிப்பு,பிரக்டின் காவிய பாணி நடிப்பு,குரட்டோவஸ்கியின் குரூர நடிப்பு,ஸ்ரனிஸ்லோவ்ஸ்கியின் முறை நடிப்பு என நீளும் நவீன நடிப்பு முறைகள் எல்லாவற்றுக்குமே கற்பனை செய்தலே இவற்றின் ஊடுபொருளாய் இருக்கிறது.கற்பனை இல்லாவிட்டால் நடிகன் இல்லை.

நடிப்பு என்பதே மிகைதான் எந்த பாத்திரமானாலும் அது சினிமாவாக இருந்தாலும் நாடகமாக இருந்தாலும் நடிகனோ நடிகையோ கற்பனை செய்வதன் மூலமே பாத்திர வார்ப்பை உருவாக்குகின்றனர் அங்கேயே மிகை என்ற பதமும் பொருளும் குந்திக் கொள்கிறது .யதார்த்த நடிப்பு கூட மிகை என்ற கற்பனைதான் ஒருவரைப் போல கற்பனை செய்தல் இங்கு போல செய்தல் இந்த போல செய்தல் எனும் கற்பனை உலகை அற்புதமாக சிருஸ்டித்தவர் சிவாஜி கணேசன்.

நடிப்பு என்பது சிருஸ்டிப்புதான் உருவாக்கம் படைத்தல் நடிகன் படைப்பாளியாகிறான் .கண்டுபிடிபாளனாகிறான் கலை என்பதே கண்டு பிடிப்புதான் தோண்டி தோண்டி கண்டு பிடித்தல்.

கற்பனையின் வழி சிவாஜிகணேசன் வார்த்தெடுத்த பாத்திரங்கள் பல நூறு ஒரு பாடலிலேயே பல நூறு பாவங்கள் அவரிடத்தில் கெஞ்சி நிற்கும்.

பல அறிவு ஜீவிகள் அவரை மிகை நடிப்பு என்று விமர்சிப்பதும் உண்டு நடிப்பு என்பதே கற்பனையான மிகைதான் என அறியாதவர்கள்.

கற்பனைக்கு எட்டாத நடிப்பு என்ற விடயம் பற்றி நாம் பேச வேண்டுமென்றால் அது சிவாஜி கணேசனது நடிப்பு பற்றியதாகவே இருக்கும்.ஏனெனில் நடிப்பு என்பது கற்பனை செய்தல்தான் கற்பனை செய்யாமல் நடிக்க முடியாது.

நடிகன் என்பவனே கற்பனை தளத்தில் பயணிப்பவன் கற்பனை செய்ரல் இல்லா விட்டால் கலை என்பதே இல்லை.அது எல்லா கலைகளுக்கும் பொருந்தும்.சிலை செய்பவன் யதார்த்தத்திலிருந்து கற்பனைக்குள் புகுந்து அழகியலை வெளிப்படுத்துகிறான் நாம் கோயில்களில் காணும் சிலைகள் கற்பனை மிகைகள் தானே.

ஒரு இசை மேதை தான் செய்யும் கச்சேரியில் ஆலாபனைகள் மூலம் அவையில் எல்லோரையும் கட்டிப் போடுகிறான் .ஆலாபனையின் வீரியம் ஓங்க ஓங்க அது வானத்தைக் கிழித்துக் கொண்டு இசையின் உச்சங்களை தொடுகிறது.சிவாஜி கணேசன் நடிப்பில் கற்பனை எனும் மிகையால் நடிப்பாலாபனை செய்த ஒரே நடிகன் என நாம் ஆணித்தரமாக சொல்ல முடியும் அவன் குரல் வானத்தை கிழித்து மேகங்கள் கொண்டாடிய சிம்மக் குரல் மின்னலை விட அதிர்வுகள் தந்த ஆற்புத குரல்.

ரவி வர்மாவின் ஓவியங்கள் கற்பனைகளின் கோடுகள்தானே ஏன் இண்றய கலைஞன் மருது வரை கற்பனைக் கோடுகளின் மிகை தானே அது தானே அற்புத கலையாக நாம் கொண்டாடுகிறோம் சிவாஜிகணேசனும் அத்தகைய அற்புத கலை அழகியல்தான்

நடிப்பு என்று பேசும் போது அது எந்த வகை நடிப்பாக இருந்தாலும் அது கற்பனை என்கிற மிகையுடன் இணைந்ததே.

எல்லா நடிகர்களுமே மிகை நாடுபவர்கள்தான் தமிழ் சினிமாவில் அன்றய கிட்டப்பா முதல் இன்றைய தனுஸ் வரை மிகை நாடிய கலைஞர்களே நடிப்பு எனும் கலை பிறப்பெடுப்பது கற்பனை எனும் மிகை சார்ந்தே.

எல்லா கலைகளும் கற்பனை சார்ந்தே கலைத்துவம் பெறுகின்றன கற்பனை இன்றேல் கலை இல்லை.

imagination என ஆங்கிலத்தில் சொல்வார்கள் யதார்த்த நடிப்பாக இருந்தாலும் கற்பனை செய்துதான் நடிக்க முடியும்.மற்றவர்கள் கற்பனை செய்து பார்க்காத பாவங்களை தன் நடிப்பில் வெளிப்படுத்தியவர் சிவாஜி கணேசன் இது உலகில் வேறு எந்த நடிகனுக்கும் வாய்க்காத வரம்.

சினிமாவை தன் வயப் படுத்திய மா நடிகன்

சினிமா எனும் கலை நவீன கலையாய் நமக்கு அறிமுகமான வடிவம் அதன் பேசு மொழி கமராதான் கமரா வழியே காணும் ஒளிக் கலவையினூடு வரும் உணர்ச்சி பாவம் கதைக் களம் அதில் வரும் முரண் மோதுகை முடிச்சவிழும் உச்சக் கட்டம் என பார்வையாளர்களை ரசிகானுபவத்தின் வழி பயணிக்க வைக்கும் காட்சி மொழி சினிமா.

இந்த சினிமா தமிழ் பேசிய போது தமிழ் கலாசார மரபின் நீட்சியாகவே உள் வாங்கப் பட்டது.பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் குறிப்பிடுவது போல பாடல்களை தவிர்த்து விட்டு தமிழ் சினிமாவை பார்க்க முடியாது என்பது நம் கலாசார வேர்களை விளங்கிக் கொண்ட பார்வை அது.

தமிழ் சினிமாவை தன் வயமாக்கிய நடிப்பாளுமையாய் நாம் நடிகர் திலகத்தை விளங்கிக் கொள்ள முடியும் .தமிழ் சினிமாவை சரியாக விளங்கிக் கொள்ளாத அதி மேதாவிகள் சிலரே அவர் நடிப்பு நாடகத்துக்குத்தான் சரி என பத்தாம் பசலித் தனமான முன் மொழிவுகளை செய்தனர்.மிகை நடிப்பு என புறந் தள்ள முற்பட்டனர் சினிமா எனும் கலையை தமிழர்கள் விளங்கிக் கொள்ளவில்லை எனும் குற்றச் சாட்டுகளை முன் வைத்தனர்.

மிகை நடிப்பு என்பதற்கு சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பு என்பதே மிகைதான் என பதிலளித்து அதை கடந்து சென்றிருக்கிறார் .நடிப்பு எனும் கலை நடிப்பதே ஒரு மிகைதான்.யூல் பிரைனரையும்,சால்ஸ்ஹெஸ்ரனையும் அவர்களது மனோரதிய நடிப்பு வெளிப்பாட்டுக்காக கொண்டாடும் பலர் அந்த வகை நடிப்பின் உச்சங்களை கர்ணன் போன்ற படங்களில் சாதித்து நின்றதை பாராட்ட மறுக்கின்றனர்.

சினிமா மொழியை கண்டு பிடித்த மேலைத் தேயத்தில்தான் நாம் மிக மோசமான மசாலா சினிமா மொழியை காண்கிறோம்.மாவல் படங்களும் ஏலியன்கள் பற்றிய சித்தரிப்புகளும் அருவருப்பு நிறைந்தவைகளாய் கொட்டிக் கிடக்கின்றன.

தமிழ் திரையிசைக்கு உயிரூட்டிய அற்புத கலைஞனாக நாம் நடிகர் திலகத்தை கொண்டாட முடியும் ஒரு காவிய முகத்தை திரையிசைப் பாடல்களின் அபிநயப்பு மூலம் அசாத்தியமாக வெளிப் படுத்திய மா கலைஞன் சிவாஜி கணேசன்.

சினிமா எனும் கலை வடிவத்தை அதன் கமரா கோணங்களை நன்கு விளங்கிக் கொண்டு அதற்காகவே புதிய தமிழ் நடிப்பு மொழியை உருவாக்கியவர் சிவாஜி கணேசன்.அதனால்தான் இன்று தொலைக் காட்சிகளில் அவர் படங்கள் தொலைக் காட்சியிலும் துல்லியமான காட்சி மொழியாய் ரசிகர்களிடம் எந்த சேதாரமும் இன்றி போய்ச் சேருகிறது.

பால.சுகுமார் -சேனையூர் (லண்டன்)

மேநாள் முதன்மையர்

கலை கலாசாரப் புலம்

கிழக்குப் பல்கலைக்கழகம்

இலங்கை

ஆசிரியர்