ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ உடன்படிக்கைகளில் குறிப்பிடப்படாத இணை உறுப்பினர் தகுதியை கனடாவுக்கு வழங்குவதற்கான கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ராஸ்பேர்க்கில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே, அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
வான் டெர் லேயனின் இந்த அறிவிப்பானது, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால கொள்கை நிலைப்பாட்டில் ஏற்பட்டுள்ள ஒரு குறிப்பிடத்தக்க மாற்றமாகக் கருதப்படுகிறது. வரலாற்று ரீதியாக இவ்வாறான நெகிழ்வுத்தன்மை கொண்ட உறுப்பினர் வகைகளை எதிர்த்து வந்த ஐரோப்பிய ஒன்றியம், கடந்த மே மாதத்தில் உக்ரைனுக்கு முழுமையான உறுப்பினர் அங்கீகாரத்தை வழங்குவதற்கான முதற்படியாக இணை உறுப்பினர் அந்தஸ்தை வழங்குமாறு, ஜெர்மனி முன்வைத்த யோசனையையும் ஏற்றுக்கொண்டிருந்தது.
கூட்டாண்மைகள் என்பது ஐரோப்பாவுக்கு ஒரு மூலோபாயத் தெரிவு மாத்திரமல்லாது, சர்வதேச விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட அமைப்பில் ஏற்பட்டுள்ள விரிசல்களுக்கான ஒரு பதில் நடவடிக்கையாகவும் அமைந்துள்ளது என தனது உரையில் அவர் சுட்டிக்காட்டினார்.
செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம், ஆர்டிக் பிராந்தியம் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் விவகாரங்கள் வரை கனடாவும் ஐரோப்பாவும் உலகை ஒரே கோணத்திலேயே நோக்குகின்றன என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன், உக்ரைன் விவகாரம், பிராந்திய பாதுகாப்பு, மூலப்பொருட்கள் மற்றும் விநியோகச் சங்கிலி முகாமைத்துவம் ஆகியவற்றில் இரு தரப்பும் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளதாகவும், எல்லாவற்றிற்கும் மேலாக ஐரோப்பாவும் கனடாவும் ஜனநாயகக் கட்டமைப்பை முழுமையாக நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.