முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதல் பெண்மணியுமான ஷிரந்தி ராஜபக்ஷ, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் இன்று புதன்கிழமை (07) கைது செய்யப்பட்ட நிலையில், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சிரிலிய சவிய அமைப்பு தொடர்பான விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து சிரிலிய சவிய அமைப்பின் ஊடாக ரூ.10 மில்லியன் நிதி பெறப்பட்டமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிடி ஸ்கேன் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்காகவே இந்த நிதி பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், குறிப்பிட்ட நோக்கத்திற்காக நிதி பெறப்பட்ட போதிலும், அந்த சிடி ஸ்கேன் இயந்திரம் வைத்தியசாலைக்கு வழங்கப்படவில்லை என விசாரணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அரச நிதியை குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் பொதுச் சொத்து சட்டத்தின் கீழான குற்றங்கள் உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் காலை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், பின்னர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
ஷிரந்தி ராஜபக்ஷவின் நீதிமன்ற முன்னிலைப்படுத்தல் தொடர்பான மேலதிக விபரங்கள் சற்று நேரத்தில் வெளியாகும்.