நூலாசிரியர் விமல் பரம் அவர்களின் சிறுகதைத் தொகுப்பின் நூலின் தலைப்பு “தீதும் நன்றும்”. எதற்காக கணியன் பூங்குன்றனாரின் புறநானூற்று அடிகளை வைத்திருக்கின்றார் என்ற கேள்வியோடு அட்டைப் படத்தை நோக்கும் போது ஒரு பெண்ணின் முன்னால் தோன்றும் காட்சி நீர்க்கோலங்களாக கலைந்து போவதைக் காணலாம். இதுவும் ஏன் என்று கேள்வியோடு சமூக வாழ்வியல் நோக்கில் இந்த நூலை ஆராய்கின்றது இந்தப் பதிவு.
இந்த நூலை எழுதியவர் திருமதி. விமல் பரம் அவர்கள். இவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதை இவரின் சிறுகதைகள் பெற்ற பாராட்டுகளில் இருந்து புரிந்து கொள்ளலாம். இதன் முதற் பதிப்பு 2025 சித்திரை மாதம் வெளிவந்துள்ளது. அல்வாயில் உள்ள ஜீவநதி வெளியிட்டகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விலை இலங்கைப் பணம் 800 ரூபா ஆகும். இதன் பக்கங்கள் 166, இது 15 சிறுகதைகளின் தொகுப்பு நூலாகும்.
பக்கம் மூன்றில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று சங்க இலக்கியத்தை அறிமுகம் செய்து வைத்த தனது தாய், தந்தையர் திரு. வேலுப்பிள்ளை சுப்ரமணியம், திருமதி. இராசம்மா சுப்பிரமணியம் அவர்களுக்கு இந்த நூலை, காணிக்கையாக்கி இருக்கின்றார்.
பக்கம் ஐந்தில், இவரது மூத்த சகோதரி திருமதி. தாமரைச்செல்வி அவர்களது வாழ்த்துரையில் “சமூகத்தின் மீதான அக்கறையும், மனிதர்கள் மீதான கரிசனையுமே ஒரு படைப்பாளி உருவாகக் காரணிகளாகின்றன. அந்த அக்கறையும் கரிசனையும் இவரின் எழுத்துக்களில் பிரதிபலிப்பதை நம்மால் உணர முடிகின்றது” என்று கூறுவதில் இருந்து இவரின் சமூகச் சிந்தனை இந்தக் கதைகளில் நிச்சயமாக இருக்கும் என்பது ஐயமறத் தெரிகின்றது.
அடுத்து பக்கம் 7 இல் தாட்சாயணி அவர்களின் முன்னுரையில், “இச்சிறுகதைத் தொகுதியைப் படிப்பவர்கள் மனதில் பாத்திர குணாதிசயங்களுக்கு ஏற்ப ஏற்படும் பதற்றமும் கொந்தளிப்பும் முடிவில் நிறைவாக உருவாகின்றது” என இவரது கதைகளின் முடிவுகளைச் சிறப்புறக் குறிப்பிடுகின்றார்.
பக்கம் பத்தில் நூலாசிரியர் விமல் பரம் அவர்கள், தனது உரையில், “என்னை சுற்றி நடக்கும் சம்பவங்கள், என் மனதைப் பாதித்த விடையங்கள் பற்றி எழுத என்னை ஊக்கிவித்து இந்த எழுத்துலகுக்கு கொண்டு வந்தவர் என் இளைய சகோதரர் சுப்ரம் சுரேஸ் என்கின்றார். அதுபோலவே என்னையும் எழுத ஊக்குவித்து இன்று வரை எனது படைப்புகளை வணக்கம் லண்டன் பத்திரிகைத் தளத்தில் பிரசுரித்து வருவதும் சுரேஸ் அவர்களே என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒன்று.
இவரின் அனைத்துக் கதைகளுமே போருக்குப் பிந்தைய எம்மவரின் வலி நிறைந்த வாழ்வியலையே காட்டுகின்றன. பக்கம் 13 இல் முதலாவது சிறுகதையை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டால், “இறுகப் பற்று” என்ற தலைப்பில் இது அமைந்துள்ளது. கதையின் முதல் மாந்தர் “நான்” என்ற தன்மையிடத்திலேயே அமைந்துள்ளது. இதிலுள்ள 15 சிறு கதைகளிலுமே “நான்” என்று கதை சொல்லும் பாத்திரமே முதன்மைப் பாத்திரமாக வருகின்றது. ஆதலால் வாசகி ஆகிய நானும் முதன்மைப் பாத்திரமாகவே மாறிவிடுகின்றேன். இந்தக் கதை தொடங்கும் முதல் வரியே என் கவனத்தை ஈர்த்தது. “இரவின் அமைதி பயங்கரமாக இருந்தது. கண்களை மூடியபடி கட்டிலில் படுத்திருந்தேன்”. என சிறுகதைக்குரிய குணாம்சமாக வர்ணனை ஏதுமின்றி, விறுவிறுப்புடனே இந்தக் கதை தொடங்குகின்றது. எம் சமூகத்தில் போரின் வடுவினால் உருவாகிய ஒரு மாற்றுத் திறனாளி சந்திக்கும் பிரச்சனைகள், அவரின் மனக்கவலைகள், உணர்வுகளை படம் பிடித்துக் காட்டுகின்றார். குறைந்த பாத்திரங்களை நகர விட்டு, முடிவாக அந்தப் பிரச்சனையை அப்படியே விட்டு விடாது தாட்சாயணி அவர்கள், அவரது முன்னுரையில் குறிப்பிட்டது போல சமூகத்தின் ஊடாகக் கிடைக்கும் தீர்வைச் சுபமாகத் தந்து இவ்வாறு முடிக்கின்றார். ஒரு பார்வை இழந்தவர் கூறுகிறார். “ஏன் நாங்கள் ஒருத்தர் ஒருத்தருக்கு உதவி செய்யக்கூடாது. இழப்பு எங்களை ஒன்று சேர்க்கும். எங்களோடு வந்து பழகி பாருங்கோ. வருத்தங்கள் தெரியாது. வாழ்வில் ஒரு பிடிப்பு வரும்” என்று கூறி சமூகம் மூலம் கிடைக்கும் நிம்மதியான ஒரு முடிவைத் தந்திருக்கின்றார்.
அடுத்து இந்த ஆய்வுக்கு எடுத்திருக்கும் இன்னொரு சிறுகதை, 54 ஆம் பக்கத்தில் உள்ளது. இதன் தலைப்பு “தூறல்கள் மழையாகலாம்”. நம் சமூகத்தில் இன்றைய முதியோரின் நிலைமையை எடுத்துக்காட்டுகிறார். முதியோர் இல்லத்தில் இருக்கும் ஒரு அம்மா தான் இந்தக் கதையின் முதல் மாந்தர். வளமான கிளிநொச்சி மண்ணில், பரந்தன் குமரபுரம் வயல் வெளிகளால் சூழ்ந்து காணப்படும் கிராமம். சொந்தமாக வயல் செய்து தன்னிறைவும், நிம்மதியும், மகிழ்ச்சியுமாக வாழ்ந்த கதாபாத்திரம். இப்போது யாருமே இல்லாததால் தானே விரும்பி வவுனியா முதியோர் இல்லத்திற்கு வந்து வாழ்ந்து வருகின்றார். என்றாலும் “சொந்த ஊரில், சொந்த வீட்டில், சொந்தங்களுடன் வாழ்ந்த வாழ்க்கை இன்று கனவு போல ஆகிவிட்டது” என்று கூறி மனம் வருந்துகின்றார். இந்த வரிகள் என்னை சங்க இலக்கியத்துக்குள் அப்படியே இழுத்துக் கொண்டு போய் விட்டன.
அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்,
எந்தையும் உடையேம், எம் குன்றும் பிறர் கொளார்;
இற்றைத் திங்கள் இவ் வெண்நிலவில்,
வென்று எறி முரசின் வேந்தர் எம்
குன்றும் கொண்டார்; யாம்
எந்தையும் இலமே!
எனப் பாரி மன்னன் இறந்த பின்னர் அவரது மகளிர் புறநானூற்றில் பாடிய பாடல் இது. அதாவது அற்றைத் திங்கள் அவ் வெண்நிலவில் எமது தந்தை எம்மோடு இருந்தார். நாம் பிறந்த மண் ஆன பறம்பு மலை எம்மோடு இருந்தது .அதே போல நிறைமதி இன்றும் உலா வருகின்றது. ஆனால் இன்று நமது தந்தையும் நம்முடன் இல்லை. எமது மண்ணும் எம்மிடம் இல்லை என்று பாடுகின்றனர். இந்த உணர்வு புகலிட வாழ்வில் இருக்கும் எம் எல்லோருக்கும் உள்ளது என்பது வலி நிறைந்த உண்மை.
அடுத்து எனது ஆய்வுக்கு 64 ஆம் பக்கத்தில் உள்ள “தீதும் நன்றும்” என்ற தலைப்பில் உள்ள கதையை எடுத்துக் கொள்கிறேன். இப்போது ஏன் இந்த நூலுக்கு “தீதும் நன்றும்” என்ற பெயர் வைத்திருக்கின்றார் என்பது வாசகர்களுக்கும் புரியும். ஒன்று இவரது பெற்றோர் சொல்லித் தந்த சமூக அறத்தின் பெயரில் வைத்திருக்கலாம். இன்னொரு காரணம் “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்ற கருவைக் கொண்டே இந்தக் கதை அமைந்திருக்கிறது. இதற்காகவும் இவர் இந்த நூலுக்குரிய தலைப்பை வைத்திருக்கலாம். இந்தகா கதையை தவிர்த்து விட்டு என்னால் சமூக வாழ்வியல் நோக்கில் இந்த நூலை ஆராய முடியாது. ஒரு சமூகத்திற்கு ஒழுக்கம் காட்டி, பண்புகள் புகட்டி, வழிகாட்டியாக இருப்பது அந்த சமூகத்தின் பழம்பெரும் இலக்கியங்கள் தான். அந்த வகையில் நமக்கு சங்க இலக்கியங்கள் தான் அக்காலத் தமிழரின் வாழ்வியல் கண்ணாடி. இக்காலத் தமிழரின் வழிகாட்டி. இந்த சிறுகதையில் ஒரு அன்னை ஒரு மகன் இருக்கிறார்கள். மகன் வளர்ந்து வெளிநாடு செல்கின்றான். திருமணம் நடக்கிறது. மருமகள் பெரிதாக மாமியாருடன் பழகுவதில்லை. குழந்தை பிறக்கிறது. குழந்தையைக் கொண்டு போய் மாமியாரிடம் காட்டவும் இல்லை. மருமகளுக்கு அதில் விருப்பமும் இல்லை. மகன், அம்மாவை வெளிநாட்டுக்கு அழைத்துப் பார்க்கவும் இல்லை. நாட்கள் ஓடுகின்றன. அந்தக் குழந்தையும் வளர்ந்து திருமணம் செய்து தனியாகப் போய்விடுகின்றான். இப்பொழுது அந்த வயதான அம்மாவின் மகனும் மருமகளும் தனிமையில் இருந்து தொலைக்காட்சி பார்க்கின்றனர். கவியரங்கம் ஒன்று அதில் நடக்கின்றது. பேச்சாளர் ஒருவர் சங்க இலக்கிய பாடல் ஒன்றுக்கு பொருள் கூறிக் கொண்டிருக்கின்றார்.
2000 வருடங்களுக்கு முன்னர் கணியன் பூங்குன்றனார் உலகப் புகழ் பெற்ற சமூக நீதியை இதில் பாடி வைத்திருக்கிறார்.
யாதும் ஊரே! யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
எனத் தொடங்குகிறது.
எல்லா ஊரும் எமது ஊரே!
எல்லா மக்களும் நமது மக்களே!நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை. அவரவர் செய்யும் வினைப் பயனாகவே வருகின்றது எனப் பாடி வைத்திருக்கிறார்.
இதைக் கேட்ட மருமகள் குலுங்கிக் குலுங்கி அழுகின்றாள். இதுதான் இந்த கதையின் முடிவு. யாரும் ஒன்றும் செய்ய முடியாது. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று முடிக்கின்றார். ஆக பழந்தமிழ் இலக்கியங்கள் தான் நம் சமூகத்தில் மக்களைச் செதுக்கிச், செப்பனிட்டு செழுமைப்படுத்துகின்றன என்பதை இந்தக் கதை நமக்கு புரிய வைக்கின்றது.
அடுத்து 75 ஆம் பக்கத்தில் உள்ள “உறவின் தேடல்” என்ற தலைப்பில் ஒரு சிறுகதை உள்ளது. எம் தாய் மண்ணில் இப்போது நமது சமூகம் அடிக்கடி சந்திக்கும் பேரவலம் வீதி விபத்து ஆகும். இந்த வீதி விபத்தில் ஒரே ஒரு மகன் பெற்றோரை இழந்து அனாதை ஆகின்றான். அன்னை தந்தையின் குடும்பம் யாருமே இவனை சேர்த்துக் கொள்ளவில்லை. ஏனெனில் அவர்கள் இருவரும் காதலித்து யாருடைய விருப்பமும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த நேரத்தில் அவனது அம்மம்மாவும் கைவிடப்படுகின்றார். அவரைக் கொண்டு போய் முதியோர் இல்லத்தில் விடுகின்றனர். இதை அறிந்து அந்த முதியோர் இல்லத்துக்கு போகின்றான்.
என்ர செல்லமே நான் இருக்கிறனடா உனக்கு. என்று கூறி, அம்மம்மா தலை வருட, அம்மாவே வருடியது போல் இருந்தது என இந்தக் கதையை முடிக்கின்றா.ர் முடிவை வாசிக்கும் போது தொண்டைத் கண்ணீர் வற்றி அழுகை வந்தது. இந்த நெகிழ்ச்சியான உணர்வு வேறு சில கதைகளை வாசிக்கும் போதும் எனக்கு ஏற்பட்டது.
இந்த நூலின் அட்டைப்படச் செய்தியை 138 ம் பக்கத்தில் அமைந்துள்ள “விடியும் பொழுது” என்ற கதையின் கருவே கூறுகின்றது. ஒரு பெண்ணால் நிலையான கோலம் போட முடியவில்லை. இந்த சமூகத்தில் எல்லாமே நீர்க் கோலங்களாக அவள் வாழ்வில் கலைகின்றன. இறுதியாக தனக்குப் பிடித்த கோலத்தை வரைந்து, தனக்குப் பிடித்த முடிவை எடுத்து தன் வாழ்வை அமைக்கின்றாள்.
இவ்வாறாக இவர் எழுதிய இந்த 15 கதைகளில் போரின் வடுக்கள், வலிகள் நிறைந்த வாழ்வியல், சமூகத்தில் முதியோரின் நிலை, மாற்றுத்திறனாளிகளின் உணர்வுகள், கொரோனாவில் பட்ட துன்பம், பெண்களின் நிலை, பெற்றோரை உதாசீனப்படுத்தும் பிள்ளைகள், வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் உதவிகள், 2022 ல் எம் தாய் மண்ணில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, அதனால் எரிவாயுக்காக மக்களின் காத்திருப்பு, அடுத்து பொருட்களைப் பதுக்குதல், அதனால் காசு பார்க்கும் வணிகர் கூட்டம் போன்றவற்றை கருவாகக் கொண்டு இவர் தனது படைப்புகளை படைத்திருக்கின்றார் .
சிறுகதை என்றால் எடுப்பு முடிப்பும் குதிரைப் பந்தயம் போல் விறுவிறுப்பும், இனிமையும், ஈர்ப்பும் இருக்க வேண்டும். இந்த அம்சங்களை இவரது படைப்பில் நான் கண்டு கொண்டேன். ஒவ்வொரு கதையும் ஒரு தடவை அமர்ந்து ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடியதாக என் கவனத்தை ஈர்த்தது. சொல்ல வந்த கருத்தை மறக்க முடியாத வகையில் இவர் எழுதி இருக்கின்றார். வேண்டாத விளக்கங்களோ, வர்ணனைகளோ இல்லாத தனது கதைகளை நகர்த்தி இருக்கின்றார். பல பறவைகள் ஒன்று சேர்ந்து கூட்டமாக பறப்பது போன்றது தான் ஒரு முழுநீள நாவல். ஆனால் சிறுகதை என்பது ஒரு பறவை மட்டும் தனித்து பறப்பது போன்றது. முதன்மைப் பாத்திரத்தை மட்டும் பறக்கவிட்டு குறைந்த அளவு பாத்திரங்களுடன் கதைகளை கொண்டு சென்றிருக்கின்றார்.
இவரின் எளிமையான சொல்லாடல் அனைவரையும் கவரும் என்பது உண்மை. சமுதாயச் சிந்தனை கொண்ட இவரின் கிராமிய மண்மனம் மாறாத சொற்பிரயோகங்கள் என்னை வெகுவாக ஈர்த்தன. உதாரணமாக,
“கோழிக்கூட்டில் உள்ள பழைய உமியை மாத்தி புது உமி போட்டாச்சு”
என்ற வரியில் நமது கிராமிய வாழ்வை புகலிடத்தில் தொலைத்துக்கொண்டும், மறந்து கொண்டும் இருக்கும் எமக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகிறார். பெரும்பாலும் பரந்தன், குமரபுரமே இவரது கதைக்களமாக அமைந்திருந்தது. நானும் அதே கிளிநொச்சி மண்ணைச் சார்ந்தவள் என்பதால் இவரின் கதைகளுக்குள் இன்னும் நெருக்கமானேன்.
ஒரு திறனாய்வாளர் வெறுமனே ஒரு படைப்பைச் சிறந்தது என்று சொல்வது நடுவு நிலை அல்ல. இவரின் சில சிறுகதைகளில் உரையாடல்கள் நீளமாகவும், அதிகமாகவும் இருப்பது போல் தென்பட்டது. இவரின் சிறுகதை வளர்ச்சி ஓட்டத்திற்கு அதிகமான உரையாடல்கள் தடை செய்யக்கூடாது என்பது எனது கருத்தாக இருக்கின்றது.
“மீன் குஞ்சுக்கு நீந்தக் கற்றுத் தர வேண்டுமா?” இது முதல் பதிப்பு என்று கூற முடியாத அளவுக்கு மிகச் சிறப்பான படைப்புக்களை வெளியிட்டுள்ளார். இன்றைய அவசர உலகில் நம் சமூகத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு அளவில் சிறியதாகவும், சுவை படவும் சிறுகதைகள் மற்றும் நாவல்கள் மேலும் மேலும் இவர் எழுத வேண்டும். இவரின் ஒவ்வொரு வாழ்வியல் தளங்களான, தாய்மண் பிரித்தானியா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கிடைக்கும் இவரது வாழ்வியல் அனுபவங்கள் படைப்புகளாக வெளிவர வேண்டும் என்பது எமது அவா.
இந்த ஆய்வில் என் மனதைப் பாதித்த சில கதைகளை மட்டுமே தொட்டிருக்கின்றேன். இந்த ஆய்வுரை வாசகர்களின் ஆர்வத்தைத் தூண்டி, “தீதும் நன்றும்” என்ற நூலை வாசிக்க வழி சமைக்கும் என நம்புகின்றேன்.
-ஜெயஶ்ரீ சதானந்தன்