அது ஒரு காலம்
தித்திக்கும் தேன் பொழுதினில்
அன்னையின் மடி தவழும் சுகம்
தந்தது என் சொந்த மண்
ஒரு காலத்தில் என் தாய் மண்
எவ்வளவு அமைதியானது
இப்பொழுது நீண்ட வரலாற்றை
அல்லவா படைத்து விட்டது
என் கைப் பிடித்து எழுதிவிட்ட
“அ “எத்தனை வடிவங்கள்
அழித்து அழித்து எழுதி விளையாடிய
கரங்களில் பற்றிக்கொண்டது
நான் உயிராய் நினைக்கும்
என் தாய் மண்
இங்கு தானே நாங்கள் விளையாடினோம்
இங்குதானே குண்டு மழையில் குளித்தோம்
சத்தம் இல்லாமல் பலர் புதைந்தது
இந்த மண்ணில் தானே
எத்தனை காலனியின் இடுக்குகளில்
இரத்த குமிழ்களோடு ஒட்டிச் சென்றிருக்கும்
என் தாய் மண்
தூய்மையான காற்றில் வீசியெறிந்திட்ட
கந்தகத் துகள்கள் என் மண்ணில்
கலந்திட்டது இன்றும் உணர்கின்றேன்
பெருமழை பொழிகையில்
நினைத்துக்கொள்கின்றேன்
தலைவிரித்தாடிய குண்டுமழைகளில்
அள்ளி வீசிய மண்ணோடு
அவயங்கள் சிதறுண்டு செல்கையில்
எத்தனை இழப்புக்களை என் தேசமண்
கண்டிருக்கும்
சிந்தை கலங்கி தெளிவதற்குள்
ஓர் இனத்தையே உள்வாங்கி விட்டதே
இந்த மண்
மீண்டும் மீண்டும் நினைத்துக்கொள்கின்றேன்
எத்தனை ஆயிரம் மழைத்துளிகளை
எத்தனை ஆயிரம் இரத்த துளிகளை
பொதிந்து வைத்துள்ளது இந்த மண்
இன்று தூறல் மழையில் மிதந்து வரும்
மண்ணின் சுகந்தம்
தூய்மையான என் மண்ணை
நினைவுகளால் மீட்டி விடுகின்றது.
கேசுதன்
34