செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் வீரகேசரி பத்திரிக்கையில் 45 வருடங்களாக ஓவியத் துறையில் சாதனை படைத்த ஏ.மொறாயஸ் | நேர்காணல்

வீரகேசரி பத்திரிக்கையில் 45 வருடங்களாக ஓவியத் துறையில் சாதனை படைத்த ஏ.மொறாயஸ் | நேர்காணல்

3 minutes read

ஆயகலைகள் அறுபத்து நான்கிலும் ஓவியமும் முக்கியமானது ஓவியக்கலையின் மூலம் ஓவியராக தன் கைவண்ணத்தை வீரகேசரி பத்திரிக்கையில் 1970 களில் தொடங்கியவர் ஓய்வு பெறும் வரை  ஒவியராகவும், சினிமாப் பகுதி வடிவமைப்பாளராகவும் உண்மைக் கதை, திரைக்குப் பின்னால் போன்ற ஆக்கங்களின் புனைவாளராகவும் பன்முக ஆளுமையுடைய ஏ.மொறாயஸ் அவர்கள் மெல்பேர்ண் வந்திருந்தார்கள் அவரை சந்தித்து உரையாடினோம்.

1) வீரகேசரிப் பத்திரிக்கையில் எப்படி,எப்போது இணைந்தீர்கள்?

எனது ஓவியக் கல்வியை முடித்த கையோடு கொழும்புக்கு வந்தேன். வீட்டில் இருந்த படியே சினிமாப் போட்டோக்களை டிசையின் பண்ணிக் கொண்டிருந்தேன். 1969 களில் பருத்தித்துறையை சேர்ந்த சிறிசங்கர் அவர்கள் ஒரு தமிழ்த் திரைப்படம் எடுத்தார் அதற்குப் படம் வரைந்து கொடுத்தேன். அதைப் பார்த்து விட்டு என்னை அழைத்துக் கொண்டு போய் அன்று ஆசிரியராக இருந்த டேவிட் ராஜ் அவர்களிடம் சேர்த்து விட்டார்கள். அன்றில் இருந்து படம் வரைவதற்காக வீரகேசரியில் இணைந்து பணியாற்றினேன்.

drawing

2) படம் வரையும் ஓவியக் கலையை எப்படிக் கற்றுத் தேர்ந்தீர்கள்?

இந்தியாவில் கல்வி கற்றுக் கொண்டிருக்கும் போது ஓவியத்தின் மேல் இருந்த ஆர்வத்தால்  சென்னை ஓவியக் கல்லூரியில்  சேர்ந்து ஒவியத்தை நேர்த்தியாக கற்று அதில் டிப்ளோமாப் பட்டம் பெற்று சில காலம் அக் கல்லூரியிலேயே ஆசிரியராக பணியாற்றினேன். பத்திரிகையில் இணைந்து ஓவியம் வரைய வேண்டும் என்ற எண்ணத்தில் கொழும்பு வந்து வீரிகேசரியில் சேர்ந்தேன்.

3) பத்திரிகைத் துறையில் நிலைத்திருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் என்று முயர்சி செய்தீர்கள்?

நான் பத்திரிகையில் சேர்ந்த போது பல பத்திரிகை  ஜம்பவான்கள் வீரிகேசரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். இங்கே நிலைத்திருக்க வேண்டும் என்றால் நாம் ஓவியம் தவிர்ந்த வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த போது இந்த வேளையில் 83 ஜீலை கலவரத்தின் பின்பு பலர் வெளிநாடுகளுக்குப்போய் விட்டார்கள். வீரகேசரி சினிமாப் பகுதியில் பணியாற்றியவரும் போய் விட்டார். அபோது ஆசிரியராக இருந்த இராஜகோபால் அவர்கள் சினிமாப் பகுதியை எடுத்து நடாத்தும் படி என்னிடம் பொறுப்புத் தந்தார். வீரகேசரி வார வெளியீட்டின் சினிமாப் பகுதியை ஓய்வு பெறும் வரை 45 வருடமாக செய்து முடித்தேன்.

4) வீரகேசரியின் வளர்ச்சியில் ஞாயிறு வார வெளியீட்டின் சினிமாப் பகுதிக்கு பெரிய பங்கிருக்கிறது இதைப் பற்றி..

எனக்கு சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் இருந்த படியாலும் சினிமாப் பகுதியை முன்பு செய்தவர் போன்று நாமும் செய்யாமல் வித்தியாசமாகச் செய்ய வேண்டும் என்ற துடிப்போடு இருந்த என்னை திரு.இராஜகோபால் அவர்கள் பூரண சுதந்திரத்துடன் பணி புரிய எனக்கு அனுமதித்து எல்லா உதவிகளையும் செய்தார். இதனால் வீரகேசரியின் வாசகர் பெருக்கம் கூடத் தொடங்கியது.

5) மோனாலிஸாவின் சினி கேள்வி பதில் மூலம் வீரகேசரிக்கும் உங்களுக்கும் கிடைத்த வரவேற்பு அல்லது வெற்றி…

ஆம் நிறைய வாசகர்கள் தங்களின் சந்தேகங்களை கேட்டார்கள். இதனால் நிறைய வாசகர்கள் பத்திரிகையை பெற்று பத்திரிகை வளர்ச்சிக்கு ஊக்கம் தந்தார்கள். நிறையக் கடிதங்களை எழுதினார்கள். வாசகர் கணை போல சினிமாப் பகுதியில் நான் ரசித்த காட்சியை அறிமுகப் படுத்தினேன். அதில் புதிய  வாசகர்கள் வெளிநாடுகளில் இருந்தும் எழுதினார்கள். ஆவூரான் போன்றவர்கள் இதில் எழுதியே சிறுகதை எழுதும் எழுத்தாளர்களாக வளர்ந்தார்கள் என்று பெருமையாக சொல்லக் கூடிய அளவில் எனக்கும் வீரகேசரிக்கும் வெற்றி என்றே சொல்ல முடியும்.

6) அந்தக் காலத்தில் சினிமா சம்பந்தமான அறிவை அல்லது தேடலை எப்படி பெற்றீர்கள்?

அந்த காலத்தில் இந்தியாவில் இருந்து வரும் சினிமா சஞ்சிகைகள், திரைப் பட விமர்சனங்கள்  தாங்கிய வெளியீடுகளை உடனுக்குடன்  வாசிப்பேன் இப்போது இருக்கும் வசதி, இல்லாத போதும் சினிமாவின் வளர்ச்சியும் மந்தமாக இருந்ததால் தேடலும் சிரமமாக இருக்கவில்லை.

7) நீங்கள் வீரகேசரிப்  பத்திரிக்கையில்  சேர்ந்த காலத்துக்கும் ஓய்வு பெற்ற காலத்துக்கும் உள்ள மாற்றம்?

நான் சேர்ந்த போது இருந்தவர்கள் மிகவும் திறமை உள்ளவர்களாகவும் மற்றவர்களின் திறமையை வளர்த்து தங்களோடு இணைத்துக் கொண்டு போகக் கூடியவர்களாகவும், எவ்வளவோ வசதிகள் குறைந்த காலமாக இருந்த போதும் பத்திரிக்கையின் வளர்ச்சி அபாரமாக இருந்தது. அந்தக் காலத்தில் நான்கு பத்திரிகைகள் மிகவும் உச்சமான நிலையில் இருந்த போது திரு. அன்ரன் பாலசிங்கம் போன்றவர்கள் கூட விரகேசரியில் பணியாற்றினார்கள். இன்று இலத்திரனியல் வளர்ச்சி கண்டு வசதிகள் பெருகிய போதும் பத்திரிகைத் துறை  சிறப்பானதாக இருக்கிறது என்று சொல்ல முடியாதுள்ளது இது என் கருத்து.

8) வீரகேசரி வார வெளியீட்டு சினிமாப் பகுதியையும், ஓவியம் வரைதலையும்  இவ்வளவு அழகாக எப்படி வடிவமைக்க முடிகிறது?

ஆரம்பத்தில் கணனி வசதியோ இணையத்தள வசதியோ குறைவான காலத்தில் இருந்தே  நான் வேலை பார்க்கத் தொடங்கினேன். சிறுகதைகளை வாசித்து ஓவியம் வரைவது உடனே செய்து விடுவேன். சினிமாப் பகுதியில் தான் கொஞ்சம் நேரத்தை செலவு செய்ய வேண்டும்  சினி கேள்வி பதில்கள் ஒவ்வொன்றையும் வாசித்து அதற்கேற்ப பதிலளிப்பேன். அதோடு மித்திரன் வாரமலர் போன்ற பத்திரிக்கைக்கும் சில ஓவியங்கள் வரைவேன்.

9) ஓவியத் துறையில் நீங்கள் பெற்ற பரிசில்கள் விருதுகள் பற்றி…

1973 ஆம் ஆண்டு பிரபல எழுத்தாளர் கதிர்காமநாதன்  வடித்த “நான் சாகமாட்டேன்” நாவலுக்கு அட்டைப் படம் வரைந்தேன்.  நவீன ஓவிய முறையில் வடிவமைக்க அந்த அட்டைப் படம் அதே ஆண்டில் சிறந்த அட்டைப் படமாக தேர்ந்தெடுக்கப் பட்டு முன்னாள் கல்வி அமைச்சர் பதூர்தீன் மொகமட் விருது வழங்கிக் கெளரவித்தார்கள்.

10) பத்திரிக்கை துறையிலோ, ஓவியத்தறையிலோ வளர விரும்புவோருக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்னவாக இருக்கும்?

இன்று பல வசதிகள் பெருகி இருக்கின்றது. பத்திரிக்கை துறையிலும் ஓவியத்துறையிலும் நிறைய புதிய வடிவங்களும், புதிய உத்திகளும் உருவாகி வருகின்ற இந்தக் காலத்தில் மிகவும் கவனமாகவும் ஒழுங்காகவும் கற்றுத் தேர்ந்தால் நிச்சம் பத்திரிக்கை துறையிலும், ஓவியத்துறையிலும் நிலைத்து சாதனை படைக்கலாம்.

 

 

 

arooraan  ஆவூரான் அவுஸ்திரேலியாவிலிருந்து

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.