Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home இலக்கியம்இலக்கியச் சாரல் கொழும்பிலிருக்கும் சிலோனிலிருந்து திருச்சி சென்ற பயணம்! | முருகபூபதி

கொழும்பிலிருக்கும் சிலோனிலிருந்து திருச்சி சென்ற பயணம்! | முருகபூபதி

11 minutes read

அநுராதபுரம் ரயில் நிலையத்தில் மாத்திரமா தமிழர்களை தட்டி எழுப்பினார்கள்…? 1983 கலவரத்திலும்தான்!

முருகபூபதி.

நண்பர் காவலூர் ஜெகநாதன் சொன்னவாறு முதலில் கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தேன். அது கிடைத்ததும் வீரகேசரி அலுவலகத்தில் லீவுக்கு விண்ணப்பித்தேன்.

1983 கலவரத்தையடுத்து எமது அப்பாவும் காலமானதால், நாம் குடும்பத்துடன் தமிழகம் சென்று , அங்கே வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை இருக்கிறதா..? என்பதை அறிவதற்குத்தான் நூல் விட்டுப்பார்க்க நான் செல்வதாக சில நண்பர்களும் குடும்ப உறவுகளும் நினைத்தார்கள்.

இந்த நூல்விட்டுப் பார்த்தல் என்பது ஒரு விடயத்தில் ஆழம்பார்ப்பதாகும்.

கலவர காலத்தில் எனக்கு அடைக்கலம் கொடுத்த சில உறவினர்கள் திருச்சிக்கு சென்றுவிட்டனர். அத்துடன் சில கலைஞர்கள், எழுத்தாளர்களும் ராமானுஜம் கப்பல், மற்றும் விமானம் மூலம் சென்றுவிட்டனர்.

1983 கலவரத்தில், வத்தளை – நீர்கொழும்பு வீதியில் சினிமா இயக்குநர் வெங்கட் கொல்லப்பட்டார். இத்தனைக்கும் அவர் பல சிங்கள முன்னணி நடிகர்கள் நடித்த சிங்களப் படங்களுக்குத்தான் இயக்குநராகவிருந்தார். இந்திய வம்சாவளித்தமிழர். அவரை நன்கு அறிவேன்.

அவரையும் சிங்கள வன்முறையாளர்கள் நடுவீதியில் தாக்கிக் கொலைசெய்தனர்.

எங்கள் ஊரில் மும்மொழிப்படங்களையும் இந்தி, மலையாளப் படங்களையும் காண்பித்த சினிமாஸ் குணரத்தினத்தின் ராஜ் சினிமா அழகான திரைப்பட அரங்கு. குணரத்தினம் பல சிங்கள திரைப்படங்களின் தயாரிப்பாளர். வத்தளையில் அவரது விஜயா ஸ்ருடியோவும், எங்கள் ஊர் ராஜ் சினிமாவும் எரிக்கப்பட்டன.

காரணம் அவர் தமிழர். சிங்களப்படங்களை இயக்கிய வெங்கட் தமிழர். அட்டனில் லிபேர்ட்டி சினிமா தியேட்டரை நடத்திய வி.கே. டி. பொன்னுச்சாமி தமிழர். அவரது திரையரங்குகளில் பல சிங்கள திரைப்படங்களும் காண்பிக்கப்பட்டன. அவர்தான் கலைஞர் ரகுநாதனின் தெய்வம் தந்த வீடு திரைப்படத்தையும் தயாரித்தவர்.

அவரது லிபேர்ட்டி திரையரங்கும் எரிக்கப்பட்டு, அவரும் கொல்லப்பட்டார்.

மலையகத்தில் எனது அப்பாவின் நண்பர்களான சில தமிழ் வர்த்தகர்களும் கொல்லப்பட்டனர்.

ஏன்….? தமிழர் என்ற ஒரே காரணம்தான்.

நடிகர் விஜயகுமாரணதுங்க, விஜயா ஸ்ரூடியோ எரிக்கப்படும் செய்தி அறிந்து, அணிந்திருந்த சாரத்துடனேயே ( லுங்கி ) காரை எடுத்துக்கொண்டு விரைந்து வந்து சாரத்தை மடித்துக்கட்டிக்கொண்டு தீ அரக்கனுடன் போராடினார். எனினும் அவராலும் அங்கு களஞ்சியத்திலிருந்த சிங்களம் உட்பட இதர மொழித்திரைப்படச்சுருள்களை காப்பாற்ற முடியாது போய்விட்டது.

இந்தத்தகவல்கள் வெகு சொற்பம்தான். 1983 கலவரக்காட்சிகளை பக்கம் பக்கமாக எழுதுவதற்கு ஏராளமான தகவல்கள் இருக்கின்றன.

நண்பர் காவலூர் ஜெகநாதன் தனது குடும்பத்தினரை சென்னை அண்ணா நகர் மேற்கில் தங்கவைத்துவிட்டு, அடிக்கடி ராமானுஜம் கப்பலில் வந்து திரும்பிக்கொண்டிருந்தார்.

அந்தப்பாதையால் தமிழகம் சென்ற அரசியல் தலைவர் ஆனந்தசங்கரியையும் சந்தித்து நண்பரானார். அந்தக்கப்பலில் பணியாற்றிய இராமேஸ்வரத்தைச்சேர்ந்த ஒருவரும் ஜெகநாதனுக்கு நண்பராகிவிட்டார். அத்துடன் அங்கே இறங்கு துறையில் பொருட்கள், பொதிகளை சுமக்கும் ஒரு வயோதிபரும் நண்பராகிவிட்டார்.

இது விடயத்தில் காவலூர் ஜெகநாதன் விண்ணன்தான். தனக்காக மாத்திரமின்றி மற்றவர்களுக்காகவும் நண்பர் வட்டத்தை பெருக்கிக்கொள்பவர்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். அந்த நட்பு வட்டத்தினால் நன்மையும் உண்டு வில்லங்கங்களும் வரும்.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த அமிர்தலிங்கம் உட்பட ஏனைய தமிழ்த்தலைவர்களும் சென்னை சென்றுவிட்டிருந்தனர்.

தமிழ் விடுதலை இயக்கத்தலைவர்களும் அவர்களுடன் இணைந்திருந்த இளைஞர்களும் தமிழ்நாட்டில் பல இடங்களிலும் முகாம் அமைத்துவிட்டனர்.

உமா மகேஸ்வரனும் தமிழ்நாடு எம். எல். ஏ. க்கள் தங்கும் விடுதியில் அறைகள் எடுத்துவிட்டார். அருகில் அமிர்தலிங்கமும் ஒரு விடுதியில் இருந்தார். எழுத்தாள நண்பர் மு. கனகராஜனும் அவரது மனைவி அசுந்தாவும் மேற்கு அண்ணா நகரில், ஆனந்தசங்கரி குடியிருந்த வீட்டுக்கு பக்கத்து வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தனர்.

இந்தத் தகவல்களை காவலூர் ஜெகநாதன் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.

சென்னைக்கு வந்தால் தங்குவதற்கு இடம் இருக்கிறது. செலவுக்கு பணம் தேடவும் வழியிருக்கிறது என்றும் காவலூர் ஜெகநாதன் சொன்னார்.

கொழும்பு பிரதானவீதியில் சில கடைகளை அவரே எனக்கு அறிமுகப்படுத்தினார். அங்கே ஆண்களுக்கான காற்சட்டை, சேர்ட் துணிகள் வாங்கினேன். இலங்கை வாசனை சவற்காரம் சில, மற்றும் சென்னையிலிருப்பவர்கள் விரும்பும் பொருட்களையும் நண்பர் பட்டியல்போட்டுத்தந்தார். அவரது செயல்களில் அனுபவம் பேசியது.

அந்தவேளையில் ராமானுஜம் கப்பல் பலருக்கும் வர்த்தக வழிமுறைகளை காண்பித்திருந்தது. எனக்கும் இந்த வர்த்தக தந்திரங்களுக்கும் வெகு தூரம்.

எனினும் செலவுக்கு பணம் தேவை. அதனால், நண்பர் சொன்னதற்கெல்லாம் கட்டுப்பட்டேன்.

ஒருநாள் மாலை கோட்டை ரயில் நிலையத்தில் தலைமன்னார் ரயில் ஏறவந்தபோது, என்னோடு வரவிருந்த நண்பர், தனது பயணத்தில் மாற்றம் இருப்பதாகவும், தான் மறுநாள் வருவதாகவும் சொன்னதும் எனக்கு சற்று அதிர்ச்சியாகிவிட்டது.

“ என்னப்பா… உம்மை நம்பி புறப்பட்டேன். இப்போது இப்படி சொல்கிறீரே…? “

“ ஒரு பிரச்சினையும் இல்லை மச்சான். உன்னை நாளை தலைமன்னார் இறங்கு துறையில் சந்திப்பேன் “ என்றார். நாளைதானே கப்பல் புறப்படும். அதற்கிடையில் வந்துவிடுவேன். “ என்றார்.

நான் புறப்பட்டேன். மறுநாள் தலைமன்னார் பியரிலிருந்து இராமானுஜம் கப்பலில் புறப்பட்டேன்.

அவர் என்னுடன் வரவில்லை. அவர் பெயர் குறிப்பிட்டிருந்த நபரை அக்கப்பலில் சந்தித்தேன். அதுதான் எனக்கு முதலாவது கப்பல் பயணம். எனினும் அதன் சூழல் எனக்கு திருப்பதியாக இல்லை. சில மணிநேரத்தில் கப்பல் அன்று மாலைவேளையில் இராமேஸ்வரம் சென்றது.

இந்த இறங்குதுறை குறித்து நிறைய ஐதீகக்கதைகள் இருக்கின்றன. தனது மனைவி சீதையை மீட்டுச்செல்ல வந்த இராமர், சிவனுக்கு கோயில் கட்டி வணங்கிய திருத்தலம். அவரது மனைவி சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் அசோகவனத்தில் சிறைவைத்த இராவணனும் சிவ பக்தன்தான்.

இரண்டு பக்தர்களையும் சமாதானப்படுத்தி, மாற்றான் மனைவியை அயோத்திக்கு அனுப்புவதற்கு அந்தச் சிவன் எந்த ஆக்கபூர்வமான உதவியும் செய்யாமல், சவமாக இருந்துள்ளாரே என்பதில் எனக்கு அந்த சிவன் மீது கோபம்.

தூது வந்த அனுமானின் வாலில் தீ வைக்கப்பட்டது. லங்கா தகனம் நடந்தது. வானரப்படை நுழைந்தது. போர் மூண்டது. ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். இராவணன் மனைவி மண்டோதரி தாலியை அறுத்துக்கொண்டாள்.

இத்தனையும் நிகழ்ந்தபோது அந்த பரமசிவன் என்ன செய்துகொண்டிருந்தார்…?

ஒரு பாண்டியன் மனைவியின் கூந்தலின் மணம் இயற்கையா… ? செயற்கையா…? என்று கவிதை எழுத நேரம் இருந்த அவருக்கு, சீதை உருவில் வந்த பெண்ணை காப்பாற்ற திராணியில்லாமல் இருந்தாரே… ? அத்தருணமே உமாதேவியார் அவரை விவாகரத்து செய்துவிட்டு போயிருக்கவேண்டும்.

அந்த இராமேஸ்வரம் கோயிலை நான் தரிசிக்க விரும்பவில்லை.

அந்தப்பெண் மீது, இராமாயணம் படித்த காலம் முதலே எனக்கு அனுதாபம் இருந்தது. கணவனுடன் காட்டுக்கு வந்தாள். கடத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டாள். பின்னர் தீக்குளிக்கவைத்தார்கள். இறுதியில் மீண்டும் காட்டுக்குச்சென்று, லவன் – குசனைப்பெற்றுவிட்டு, இறுதியில் பூமாதேவிக்குள் அடைக்கலமானவள். அவளுக்குத்தான் இந்த ஆணாதிக்க சமுதாயம் எவ்வளவு கொடுமைகளை செய்திருக்கிறது.

இராமேஸ்வரம் துறைமுகத்தில் சுங்கப்பகுதியில் நான் கொண்டு வந்த பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அங்கிருந்த சுங்க

அதிகாரிகளின் கெடுபிடி தாங்க முடியாமல் ஒரு பெண் அழுது புலம்பியதையும் பார்த்தேன்.

மற்றும் ஒரு இலங்கைப்பயணியின் பொதியிலிருந்த குமுழ் முனை பேனைகளை ஒரு அதிகாரி அப்படியே அள்ளி தனது பொக்கட்டுக்குள் செருகினார்.

குடிவரவு பகுதியில் இருந்தவர் எனது சேர்ட் பொக்கட்டிலிருந்த ஒரு குமுழ்முனை பேனையை எனது அனுமதியில்லாமலேயே எடுத்து, படிவங்களில் எழுதினார்.

அதனை மீளப்பெறுவதற்காக சில நிமிடங்கள் நின்றேன்.

“ என்ன சார்…. போகவில்லையா..? நீங்கள் போகலாம் …” என்றார்.

“ எனது பேனை சார்…. “ என்று இழுத்தேன்.

“ சரிதான் போங்க சார்… இதுக்குப்போய் நிக்கிறீங்களே…?போங்க …போங்க… “ என்று என்னை கலைத்துவிட்டு, அடுத்த பயணியை அழைத்தார்.

எனது மனதில் கெட்ட தூஷணம்தான் வந்தது.

அந்தப்பயணத்தின் மீதே வெறுப்புத்தான் வந்தது. அதிகம் செலவாகியிருந்தாலும் விமானத்தில் ஒரு மணிநேரத்தில் போயிருக்கலாம். அந்த கப்பல் பயணத்தை மனதில் சபித்தேன். பின்னாளில் அந்த கப்பல் சேவையே நின்றுவிட்டது.

இராமேஸ்வரம் ரயில் நிலையம்நோக்கி நடந்தபோது, அந்த வீதியிலிருந்த வீடுகள், கடைகளில் இலங்கை வானொலி வர்த்தக ஒலிபரப்புத்தான் கேட்டுக்கொண்டிருந்தது.

கே. எஸ். ராஜா ஏதோ ஒரு வர்த்தக விளம்பரம் செய்துகொண்டிருந்தார். அவருக்கும் பி. எச். அப்துல் ஹமீ த்துக்கும் தமிழகத்தில் நல்ல வரவேற்பிருந்தது.

அவர்களின் குரலும் ராஜேஸ்வரி சண்முகம் , சற்சொரூபவதி நாதன், புவனலோஜனி, ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், என்று யாராவது ஒருவரது குரல் மாறிமாறி தொடர்ந்து ஒலித்தது.

ரயில் நிலையத்திற்கு பாதை விசாரித்து வந்து சேர்ந்தேன். கையிலிருந்த இந்தியப்பணத்திற்கு திருச்சி செல்வதற்கான ரயிலில் ஏறினேன். அது இரவு நேரப்பயணம்.

இலங்கையிலிருந்து வந்திருந்த ஒரு சில பயணிகளும் அந்தப்பெட்டியில் ஏறியிருந்தனர். அவர்களும் சுங்கத்தில் தமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொண்டனர்.

அந்த ரயில் அதிகாலை மூன்று மணியளவில் திருச்சியை வந்தடைந்தது. சுமார் ஒரு மணிநேரம் ரயில்மேடையிலே இருந்துவிட்டு வெளியே வந்து, திருச்சி பஸ் நிலையத்திற்கு செல்வதற்காக ஒரு சைக்கிள் ரிக்ஷாகாரரிடம் வழி கேட்டேன்.

“ ஏறுங்க சார். எங்கே கொழும்பிலிருக்கும் சிலோனிலிருந்தா வந்தீங்க…“ எனக்கேட்டார்.

“ இல்லை… சிலோனிலிருக்கும் கொழும்பிலிருந்து “ என்றேன்.

“ இரண்டும் ஒன்றுதான் சார்….ஏறுங்க சார்… “

அந்தக்காலை இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒரு சுற்றுச்சுற்றி வந்து பஸ் நிலையத்தில் இறக்கினார். கேட்டதை கொடுத்துவிட்டு, சுந்தர் நகர் செல்லும் பஸ்ஸுக்காக காத்திருந்தேன். அப்போது ஐந்து மணியாகிவிட்டது. காலைப்பொழுது புலரத்தொடங்கியது.

ஒரு கணம் திரும்பிப்பார்த்தேன். கூப்பிடும் தொலைவில் திருச்சி ரயில் நிலையம் தெரிந்தது. அந்த இருட்டில் அந்த சைக்கிள் ரிக்ஷாக்காரன் எப்படி ஏமாற்றியிருக்கிறான் பாருங்கள்.

சரி…போகட்டும். எல்லாம் அனுபவம்தான்.

சுந்தர் நகர் செல்லும் பஸ்ஸில் ஏறினேன். ஐந்தாம் குறுக்குத் தெருவுக்கு செல்லும் சந்தியில் இறக்கிவிடுங்கள் என்றேன்.

எனது சுத்தமான தமிழ் மூலம் அந்த நடத்துனர் நான் சிலோன்காரன் என்பதை அடையாளம் கண்டுகொண்டார். அந்த சுந்தர் நகரில் இலங்கையர்கள் இருப்பதையும் அவர்கள் அந்த பஸ்ஸில் அடிக்கடி திருச்சிக்கு வந்து செல்பவர்கள் என்பதையும் அறிந்துகொண்டேன்.

அந்த நடத்துனர் சில நிமிடங்களில் குறிப்பிட்ட சந்தியில் இறக்கிவிட்டார். அவ்விடத்தில் சில காலைநேர கோப்பிக்கடைகள் இருந்தன.

விநாயகனே…. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால்… என்ற பாடல்கள் இரைச்சலுடன் ஒலித்தன. ஊர் விழித்துவிட்டது என்றோ இனித்தான் இந்தக்குரல் கேட்டு விழிக்கப்போகிறது என்றோ அந்த தமிழ்நாட்டுப்பாஷையில் காப்பிக்கடைகள் கடைவிரித்து அந்தப்பாடல்களை ஒலிபரப்பிக்கொண்டிருந்தன.

“ சார், ஐந்தாம் குறுக்குத் தெரு எங்கே சார் இருக்கிறது…? “ எனக்கேட்டேன்.

எனது தமிழ் புரியவில்லை. எதுவும் சொல்லாமல் சிலர் மௌனமாக நின்றனர்.

அடுத்த காப்பிக்கடைக்குச்சென்று ஆங்கிலத்தில் Fifth Cross Street என்று கேட்டேன்.

உதட்டை பிதுக்கினார்கள். சரிதான், அவர்களுக்கும் தெரியவில்லை. யோசித்துக்கொண்டு நின்றேன்.

ஒருவர் எனது பரிதாப தோற்றத்தை பார்த்துவிட்டு, “ எங்க சார் போகணும். அட்ரஸை காட்டுங்க சார் “ என்றார்.

சுந்தர் நகருக்கு இடம்பெயர்ந்து வந்த எனது சித்தப்பாவின் முகவரி எழுதிய காகிதத்தை காண்பித்தேன்.

“ அட… ஃபிப்த் கிராஸ் ஸ் ரீட்டு… அப்படி தமிழ்ல சொல்லுங்க சார்…. “

எனக்கு தலைசுற்றுமாப்போலிருந்தது. நான் பேசியது தமிழா, ஆங்கிலமா..? அல்லது தமிழிங்கிலிஷா…!

எஞ்சியிருக்கும் நாட்களில் இந்தத் திருச்சியிலும், அடுத்து செல்லப்போகும் சிங்காரச்சென்னையிலும் இந்தத் தமிழுடன் என்ன பாடு படப்போகிறேன்.

“ அட… காவலூர் ஜெகநாதா… என்னை இப்படி ஒரு இக்கட்டில் தள்ளிவிட்டு, நீ எங்கேயடா இருக்கிறாய்….? “

ஒருவாறு சித்தப்பா வீட்டை தேடிக்கண்டுபிடித்து கதவைத்தட்டும்போது காலை ஆறுமணியுமாகியிருக்கவில்லை. அவரது குடும்பம் என்னை அந்த வேளையில் எதிர்பார்த்திருக்காதமையால் அவரது முகத்தில் பேராச்சரியம்.

இரண்டு நாட்கள் திருச்சியில் நின்றேன். அவரது மனைவியின் அண்ணரின் இரும்புக்கடை எங்கள் ஊரில் கலவரத்தின்போது சூறையாடப்பட்டது. சித்தப்பா கொச்சிக்கடையில் பணியாற்றிய காரை நகர் வர்த்தகர் அ.வே. தேவராஜாவின் மூன்று கடைகள் சூறையாடப்பட்டன.

வெட்ட வெட்ட தழைக்கும் இனம் அல்லவா எமது தமிழினம். சித்தப்பாவின் உறவினர்கள் திருச்சி வந்த சில நாட்களில் அங்கே பலசரக்கு கடைகளை திறந்துவிட்டனர்.

கலவரத்திற்குப்பின்னர், பரதேசிகளாக புலம்பெயர்ந்து சென்ற ஈழத்தமிழினம், ஐரோப்பாவிலும், கனடாவிலும், அவுஸ்திரேலியாவிலும் , குறிப்பாக பிரான்ஸில் லாசப்பல் பிரதேசத்திலும் எவ்வாறு கொடி கட்டிப்பறக்கிறார்கள் என்பதை, நானும் 1987 இற்குப்பின்னர் புகலிடத்திற்கு வந்து பார்க்கின்றேன்.

அன்று கலவரம் வந்து ஓராண்டு காலத்தில், ஈழத்தமிழர்கள் தமிழகம் சென்று எவ்வாறு தங்களை ஸ்திரப்படுத்திக்கொண்டார்கள், அதன் உறைபொருளும் மறைபொருளும் எத்தகையது என்பதையும் அந்தப்பயணத்தில் கண்டறிந்தேன்.

தமிழ் நாட்டின் உள்ளுர் மக்கள், வீடுகளை வாடகைக்கு பெறுவதற்கு சிரமப்பட்ட காலம் அது.

அவர்கள் குறைந்த வாடகைக்கு கேட்டால், “ சரிதான் போய்யா… சிலோன் காரங்க வருவாங்க… கேட்டதை கொடுத்திட்டு கம்முன்னு இருப்பாங்க …. “ என்று சொன்ன காலம் !

யாழ்ப்பாணத்தில் வெளியான சிரித்திரன் இதழில், மகுடி கேள்வி – பதில் பகுதியில் இவ்வாறு வந்திருந்தது.

“ தமிழர்களை தட்டி எழுப்பிய பெரியோர்கள் யார்…? “

“ அநுராதபுரத்தில் ரயில் ஏறும் சிங்களச்சகோதரர்கள்….! “

சிங்களச் சகோதரர்கள் அநுராதபுரத்தில் மாத்திரமா தட்டி எழுப்பினார்கள்….?

1983 ஆம் ஆண்டு கலவரத்தில் அனைத்து தமிழ்மக்களையும் அல்லவா தட்டி எழுப்பினார்கள்…!!!!!

முருகபூபதி.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More