வல்லியாம் ஆச்சி வேண்ட
வந்தநீ மகவாய் அன்று;
எல்லையில் மீனாய் ஏகி;
எடுத்ததும் ஆழி ஆகி;
தொல்வினை நீக்க என்றே
தோன்றினாய் வல்லி மண்ணில்,
வல்லவுன் அருளை ஊட்டி
வளந்தரு வண்ணா வாழி!
மச்சமாய் வந்தாய்; வல்லி
மண்ணிலே வைக்க ஆழிப்
பச்சைமால் என்ன நின்று
பரிந்தருள் செய்தாய்; வேலை
உச்சமாய்ப் பொங்கி வந்து
உன்னடி நாட அன்று
‘அச்சமே வேண்டாம் உன்னில்
ஆடநான் வருவேன்’ என்றாய்…!
பாம்பணை பள்ளி கொண்டாய்!
பவனியும் அதுவாய்க் கொண்டாய்!
காம்பணை முகிலின் நீலக்
கருந்திரு மேனி கொண்டாய்!
நாம்பணிந் தேத்தும் நல்ல
நலந்திகழ் மூர்த்தம் கொண்டாய்;
பூம்பனை சூழும் வல்லி
புரமதில் கோயில் கொண்டாய்!
சார்ந்தவுன் மருகோன் நல்ல
சந்நிதி ஆற்றைக் கொண்டான்!
ஈர்த்தணை இன்பா நீயோ
இந்துமா கடலைக் கொண்டாய்!
ஆர்ந்தெழு அன்பர் நாமோ
அணைமல நதியைக் கொண்டோம்!
ஊர்ந்தமா நாகம் பாயாய்
உறையுமா யவனே வாழ்க!
ஞாயிறு தோறும் நல்ல
நலந்திகழ் பூசை ஏற்பாய்!
ஆயிரம் நாமம் சொல்லி
அடுப்பிலே பானை வைத்து
‘தா’யிது வைத்தேன் என்று
தளிசைக ளோடு சாதம்
காயிலைக் கறியும் வைத்தால்
களித்துமே உண்பாய்! காப்பாய்!
நெய்யதை உண்பாய்; பக்தி
நேயமும் உண்பாய்; என்றும்
மெய்யதைத் தின்னச் சூழும்
மேல்வினை யெல்லாம் தின்னும்
வெய்யவோர் ஆழிக் காரா!
வேய்ங்குழல் கீதக் காரா!
உய்யமா வல்லி மண்ணில்
உதித்ததோர் மாயக் காரா!
குடமதை உடைத்து வெண்ணெய்
குளித்துமே சிரித்து உண்டாய்!
படகதில் குகனும் ஓட்டும்
பரிவதும் கொண்டாய்! பால
நடமதை ஆடிப் பாம்பின்
நஞ்சதும் நலியக் கண்டாய்!
கடலையும் போகச் சொல்லி
கனிந்துநீ போக்கும் கொண்டாய்!
மாயவா; மாலா; மன்னும்
மாமறைப் பொருளா; மலரும்
சேயவ னான செவ்வேள்
செம்மைசேர் மாமா; அன்று
ஆயவ ரோடு நின்ற
அற்புதச் செல்வா! இன்று
பாயது பாம்பாய் வல்லிப்
பதியிலே படுப்பாய் வாழி..!
வங்கமா கடலில் நீயும்
வாழ்த்தொலி யோடு மூழ்க;
அங்கமாய் உன்னைச் சூழ்ந்த
அன்பரும் ‘அரியே’ என்ன;
தங்கமாய்க் கருடன் வானில்
தக்கவோர் காட்சி நல்க;
எங்களைக் காப்பேன் என்று
எழுந்தபே ரலையில் சொல்வாய்!
‘மாயவா…!’ என்ற ழைத்தால்
மகிழ்வொடு அன்பும் பொங்க,
காயங்கள் போக்கி ஆளும்
கருணையாம் முதல்வன்; காக்கும்
தாயவன் ஆன நல்ல
சக்கரத் தாழ்வான்; பாரில்…
பாயவே அருளாம் வெள்ளம்
பவனியே கொண்டான்! வாழ்க…!
எண்ணமாய் ஆனாய்; இன்ப
எழுத்தெலாம் ஆனாய்; உந்தன்
மண்ணதைத் தொட்டால் இந்த
மானிடப் பிறவி உய்க்கும்
விண்ணவன் ஆனாய்; எங்கள்
விரதனும் ஆனாய்; எந்தன்
கண்ணிலே தோன்றும் நல்ல
கவிச்சுடர் ஆனாய் வாழி!