Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home மருத்துவம் எதிரிகள்கூட நமக்கு ஏராளமான நன்மைகள் செய்கிறார்கள்

எதிரிகள்கூட நமக்கு ஏராளமான நன்மைகள் செய்கிறார்கள்

3 minutes read

நாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத்தான் செய்யும். அந்த குறைகளை சுட்டிக்காட்டும்போது வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோமேயானால் நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ளலாம்.

நாம் எதிரிகளே இல்லாத வாழ்க்கை வாழ விரும்பு கிறோம். அது தவறு. எதிரிகள் நமக்கு பல விஷயங்களை கற்றுத்தருவார்கள். அவைகளை நாம் கற்றுக்கொண்டால்தான் பலம் பெற முடியும். கபீர்தாஸ் என்ற துறவி, ‘எதிரிகள்தான் எனக்கு ஆசான்கள். என்னை நானே திருத்திக்கொண்டு, நான் முழுமையாக மனித வாழ்க்கை வாழ அவர்கள் என்னை தூண்டு கிறார்கள். அதனால் எதிரிகள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை’ என்றார். இந்த கூற்று, மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். நமக்கு எதிரிகள் இல்லாவிட்டால் நமது குறைகளே நமக்கு தெரியாது.

எந்த நேரம் நம்மை பற்றி என்ன விமர்சனம் வருமோ என்று நாம் விழிப்புடன் இருக்க நமது எதிரிகள்தான் உதவுகிறார்கள். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. நம்மையும் சிலர் உற்று நோக்குகிறார்கள் என்ற எண்ணம் நம்மை ஒவ்வொன்றிலும் சிறப்பாக செயல்படவைக்கிறது. அந்த வகையில் நம் திறமைகளை பெருக்கிக்கொள்ள எதிரிகள் ஒரு தூண்டுகோலாக இருக்கிறார்கள். நாம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் ஒரு தூண்டுகோல் தேவை. நாம் எங்கேயாவது சோர்ந்து உட்கார்்ந்துவிடாமல் இருக்க அந்த தூண்டுகோல்தான் உதவுகிறது.


எதிரிகளே இல்லாத அரசனுக்கு வெற்றி என்பது கிடையாது. அப்படிப்பட்டவர்களுக்கு சரித்திரத்திலும் இடம் கிடையாது. ஒரு அரசனின் அத்தனை புகழுக்கும் காரணம் அவரது எதிரிகள்தான். ஒருவரது வீரமும், விவேகமும் எதிரிகள் முன்னிலையில்தான் பறைசாற்றப்படுகிறது. அப்படியானால் எதிரிகள் மதிப்பிற்குரியவர்கள்தானே!

நண்பர்களை புகழ்ந்து கொண்டாடும் நேரத்தில் எதிரிகளை பற்றியும் சிந்திக்கவேண்டும். இருவரையும் கவனித்து கணித்துப் பார்க்கவேண்டும். அப்போது நண்பர்கள் மூலம் கிடைத்த பலன்களைவிட எதிரிகள் மூலம் கிடைத்த பலன் அதிகம் என்பது புரியும். எதிரிகளாக யாரையாவது நினைத்து மன அழுத்தம் கொள்ளும்போது, பழைய எதிரி களால் கிடைத்த நன்மைகளை கணக்குப்போட்டு பார்த்தால், அந்த மனஅழுத்தம் நீங்கிவிடும்.

‘எந்த ஒரு தொழிலிலும் போட்டி என்ற ஒன்று இல்லாவிட்டால் புதிய சிந்தனைகள் எதுவும் தோன்றாது’ என்று பிரபல தொழிலதிபர் ஜே.ஆர்.டி.டாடா கூறியிருக்கிறார். எதிரிகளை சந்திக்க தயாராக இல்லாதவர்களால் வெற்றியை எட்டவே முடியாது. பெரிய தொழிலதிபர்களிடம் கேட்டால் அவர்கள் எதிரிகளை பற்றிதான் நிறைய தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களை பற்றிதான் நிறைய கதைகளை சொல்வார்கள்.

தொடக்க காலத்தில் கோத்ரெஜ் நிறுவனத்தினர் தயாரித்த பூட்டுகளை பயனற்றது என்று தூக்கி ஓரம்வைத்துவிட்டார்கள். அதற்காக அவர்கள் தொழிலை விட்டுவிடவில்லை. பல நாட்கள் முயன்று, பலவிதமான புதிய யுக்திகளை கையாண்டு புதிய பரிமாணத்துடன், நவீன தொழில்நுட்பத்துடன் பின்பு பூட்டுகளை தயாரித்தார்கள். அவர்களால் தயாரிக்கப்பட்ட பூட்டுகளை வேறு எந்த சாவியாலும் திறக்க முடியவில்லை. வேறு சாவிகளை பயன்படுத்தி தங்கள் பூட்டுகளை திறந்தால் பரிசு தருவதாக அறிவித்தார்கள். அந்த பரிசை யாராலும் பெற முடியாத அளவுக்கு அந்த பூட்டுகள் இருந்தன. ஒரு செயலை பேருக்காக செய்வதும், பல எதிர்ப்புகளை முறியடித்து முழுவீச்சுடன் செய்வதும் வெவ்வேறு விதமான பலன்களைத் தருகிறது.

ஆனால் ஒரு உண்மையை எல்லோரும் ஒத்துக்கொண்டுதான் ஆகவேண்டும். யாராலும் எதிரிகளை நேசிக்க முடியாது. அவர்களை அழைத்து, உங்களால்தான் நான் உயர்ந்தேன் என்று விருந்துவைக்கவும் முடியாது. அதே நேரத்தில் அவர்களை நினைத்து மன அழுத்தத்திற்கு உள்ளாகுவதையாவது தவிர்க்கலாம் அல்லவா!

எதிரிகளை நினைத்து வேதனைப் படாமல், தற்போது இருப்பதைவிட சிறப்பாக அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுவேன் என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அப்படி உறுதி எடுத்துக்கொள்ளும்போது பலவிதமான புதிய வழிகள் தோன்றும். முயற்சி நம் முன்னே வந்து நிற்கும். அதுதான் வெற்றிக்கான வழி.

நாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத்தான் செய்யும். நம்மை சுற்றியிருக்கும் நண்பர்கள் அந்த குறைகளைக்கூற தயங்குவார்கள். ஆனால் எதிரிகள் அந்த குறைகளை தயங்காமல் கூறுவார்கள். அதை நினைத்து வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோமேயானால் நம்மை நாமே செம்மைப்படுத்திக்கொள்ளலாம். யாருடைய குறைகளும் நிரந்தரமானது அல்ல. எதிரிகள் முன்பு நம்மை ஹீரோவாக காண்பிக்க முயற்சி செய்யும்போதுதான் நமது திறமைகள் நமக்குள்ளே இருந்து வெளிவரும்.

நாடக கொட்டகையில் டிக்கெட் கிழித்துக்கொண்டிருந்தவர் உலகம் போற்றும் நாடக எழுத்தாளரானது அவரது எதிரிகளால்தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவர் ஒரு நாடகத்தை பார்த்துவிட்டு சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்தார். அதனால் கடுப்பாகிப்போன பிரபல நாடக நடிகர் ‘உனக்கு என்ன தெரியும்? நீ என்ன பெரிய நாடக எழுத்தாளரா?’ என்ற கேள்வியை எழுப்பி, அவரை குறை சொன்னார். அந்த எதிரியால்தான் அவருக்குள்ளே இருந்த எழுத்தாளர் வெளிப்பட்டார். அவர் யார் தெரியுமா? அவர்தான் ஷேக்ஸ்பியர்!

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More