பஸ் ஆல்ட்ரின் எனும் சாகச காதலர் பிறந்த தினம் இன்று; நிலவில் முதன்முதலில் இறங்கி நடந்தது நீல் ஆம்ஸ்ட்ராங் என தெரியும் . அவருடன் நிலவுக்கு பயணம் போன இரண்டாவதாக இறங்கி நடந்த ஜீவன் இவர் தான் .
அமெரிக்காவில் பிறந்த இவர் படிப்பில் செம சுட்டியாக இளம் வயதிலேயே இருந்தார் ; ராணுவத்துக்கு போய் சாகசம் செய்யவேண்டும் என அவர் எண்ணிய பொழுது அப்பா தடுத்து பொறியியல் பக்கம் அனுப்பினார். படித்து முடித்துவிட்டு விமானப்படையில் சேர்ந்தார்.
கொரியப் போர்க்களத்தில் எண்ணற்ற சாகசங்கள் செய்து அளவற்ற சேதத்தை எதிரிப்படைகளுக்கு உண்டு செய்தார். இவர் மட்டுமே இரண்டு மிக் விமானங்களை வீழ்த்துகிறார் . பின் நாசாவில் இணைந்தார்; அப்பொழுது விண்வெளிக்கு பயணம் போன குழுவில் பல்வேறு சோதனைகளுக்கு பின் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது விண்வெளியில் ஆறு மணிநேரம் நடந்தார்- அதுவே அந்த காலத்தில் விண்வெளியில் நடக்கப்பட்ட அதிகபட்ச கால அளவு.
பின் அப்போல்லோ விண்கலத்தில் நிலவுக்கு போவதற்கு இவரும் ஆர்ம்ஸ்ட்ராங்கும் தெரிவு செய்யபட்டார்கள்; ஆல்ட்ரின் தான் முதலில் இறங்குவதாக திட்டம். ஆனால், இவரின் ஆடையில் எதோ சிக்கல்கள் தோன்ற ஆம்ஸ்ட்ராங் முதலில் நிலவில் கால் வைத்தார். அவருக்கு பின்னர் இவர் இறங்கினார்.
நிலவுப்பயணம் முடிந்து திரும்பியதும் இருவருக்கும் விருது தரப்பட்டது. ஆனால், புகழ் வெளிச்சம் எல்லாம் ஆர்ம்ஸ்ட்ராங் மீதே விழுந்தது; இவரை யாரும் சீண்டவில்லை. நிலவில் இரண்டாவதாக கால் வைத்தவர் என காரில் எழுதிக்கொண்டு திரிந்தார். குடித்து சீரழிந்தார்; மனப்பிறழ்வுக்கு உள்ளானார்; மணவாழ்க்கையும் முறிந்தது பின் மீண்டு வந்தார் அவரின் பெயரை சின்ன வயதில் ப்ரதர் ஆல்ட்ரின் என கூப்பிடாமல் சகோதரி பஸ்ஸர் ஆல்ட்ரின் என கூப்பிட அதையே சுருக்கி பஸ் ஆல்ட்ரின் என வைத்துக்கொண்டார். குழந்தை போன்ற உற்சாகம் பீறிடுவதாக
சொன்னார், அற்புதமான முன்னேற்ற நூல்களை எழுதினார். ஓய்ந்து போனதாக கருதப்பட்ட காலத்தில் டான்சிங் வித் தி ஸ்டார்ஸ் நிகழ்வில் பிரமாதமாக ஆடினார் அப்பொழுது வயது 58!
தொண்டு நிறுவனம் தொடங்கி மக்களுக்கு உதவ நிதி திரட்டும் பணியை இன்று வரை செய்து வருகிறார் .இரண்டாவதாக வருகிறவர்களை உலகம் கண்டு கொள்ளாது என்கிற எண்ணத்தை தகர்த்தெறிந்து மீண்டு வந்து நாட்டில் பல்வேறு இளைஞர்களை ஊக்குவிக்கும் மனிதராக உருவெடுத்த அவருக்கு சொல்வோம் ஹாப்பி பர்த்டே.
– பூ.கொ.சரவணன்
நன்றி | ஆனந்த விகடன்