இராக்கிலும், சிரியாவிலும் செயல்பட்டு வரும் இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாத அமைப்பின் தலைவர்களைக் கொல்வதற்கான பட்டியல் ஒன்றை அமெரிக்கா தயாரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்களில் வெளியான தகவல்:
இராக்கிலும், சிரியாவிலும் உள்ள முக்கிய ஐ.எஸ். பயங்கரவாதத் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை அமெரிக்கா தயாரித்துள்ளது.
அந்த நாடுகளில் அமெரிக்கத் தரைப்படையினர் செயல்படாததால், அந்தப் பட்டியலில் இருப்பவர்களை உயிரோடு பிடிப்பது இயலாத காரியம்.
எனவே, வான்வழித் தாக்குதல் மூலம் பயங்கரவாதத் தலைவர்களைக் கொல்வதற்கான கொலைப் பட்டியலாகத்தான் அந்தப் பட்டியலைக் கருத முடியும்.
அதில் முதலாவதாக இடம் பெற்றுள்ள பெயர் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அல்-பாக்தாதி.
அமெரிக்க விமானங்கள் தன்னை வேட்டையாடும் என்பது நன்கு தெரிந்தே அல்-பாக்தாதி ரகசிய இடத்தில் பதுங்கியுள்ளார்.
அதனால்தான், இராக், சிரியாவுக்கு வெளியிலும் தனக்கு ஆதரவு பெருகி வருவதை அறிந்தும், அவர் தலைமறைவாக உள்ளார்.
அவரது இருப்பிடம் குறித்து கடைசியாகத் தகவல் வந்து பல மாதங்கள் ஆகின்றன.
அல்-பாக்தாதி தவிர ஏராளமான ஐ.எஸ். தலைவர்களின் பெயர்கள் அமெரிக்காவின் கொலைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
அந்தப் பட்டியலில் இடம் பெற்றிருந்த பலர் அமெரிக்க விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.