இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் நடந்த இறுதிகட்ட போரின் போது இலங்கை ராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல்கள் செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக போர்குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று சர்வதேச அளவில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.
இறுதிகட்ட போரின்போது ராணுவ தளபதியாக இருந்த சரத்பொன்சேகா இதுதொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–
இறுதிகட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல் குறித்து உள்நாட்டு விசாரணை நடத்தினால் அதை சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இலங்கை ராணுவத்தில் 2 லட்சம் வீரர்கள் உள்ளனர். இவர்களில் யாராவது தவறுகள் செய்திருக்கலாம். அப்படி அவர்கள் தவறு செய்தால் விசாரணை நடத்தி அவர்களை தண்டிப்பது சரியானது தான்.
ராணுவத்துக்கு எதிரான எந்த விசாரணை வந்தாலும், அதை நாங்கள் சந்திக்க தயங்க மாட்டோம். எதை வேண்டுமானாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.