இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இலங்கை வரவுள்ள நிலையில், அந்நாட்டு சிறையில் இருக்கும் 86 தமிழக மீனவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுவிக்க இலங்கை அரசு முடிவெடுத்துள்ளது.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி அண்மையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவெடுத்திருப்பதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி 25 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கை சென்றிருந்தார். அதன் பிறகு அந்நாட்டுக்குச் செல்லும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆவார். இலங்கைப் பயணத்தின்போது அனுராதபுரம், தலைமன்னார், யாழ்ப்பாணம் உள்ளிட்ட தமிழர் பகுதிகளுக்கும் மோடி செல்லவுள்ளார்.
இந்தியப் பிரதமர் ஒருவர் யாழ்ப்பாணம் செல்வது இதுவே முதல்முறையாகும். அங்கு கலாசார மையம் அமைப்பதற்கு மோடி அடிக்கல் நாட்டுவார் எனத் தெரிகிறது.