நீதிபதிக்கு எதிரான கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மாலத்தீவு முன்னாள் அதிபர் முகமது நஷீதுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
முன்னாள் அதிபர் முகமது நஷீத், கடந்த 2012-ஆம் ஆண்டு தனது பதவிக் காலத்தில் இருந்த போது, மூத்த நீதிபதி ஒருவரை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார்.
இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனைத் தொடர்ந்து, அதிபர் பதவியிலியிருந்து முகமது நஷீத் விலகினார். பின்னர், 2013-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அவர் தோல்வியுற்றார்.
இதனையடுத்து, மாலத்தீவு அதிபராக அப்துல்லா யாமின் பதவியேற்றதும், நீதிபதிக்கு எதிராக முகமது நஷீத் பிறப்பித்த உத்தரவு குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
இதில், எந்தவித முகாந்திரமும் இல்லாமல் அந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, கடந்த பிப்ரவரி மாதம், முன்னாள் அதிபர் முகமது நஷீத் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த மாலே நீதிமன்றம், முகமது நஷீதுக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.