ஆஸ்திரேலியா அருகே பசிபிக் கடலில் வனுவாட்டு என்ற தீவு நாடு உள்ளது. இங்கு நேற்று முன்தினம் கடுமையான புயல் தாக்கியது. இதனால் அங்கு மணிக்கு 270 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. காற்றுடன் பலத்த மழையும் கொட்டியது. அதைத்தொடர்ந்து புயல் காற்று தாக்கமும் அதிகம் இருந்ததால் மரங்கள் சாய்ந்தன. ஆயிரக்கணக்கான வீடுகள் இடிந்தன.
தலைநகர் போர்ட் வில்லாவில் 90 சதவீதம் வீடுகள் இடிந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பலபகுதிகளில் கிராமங்கள் முற்றிலும் அழிந்தன. அவை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. புயல் மழை வெள்ளத்தில் சிக்கி இதுவரை 8 பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பலர் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுவதால் சாவு எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.
வீடுகளை இழந்த மக்கள் 20 மையங்களில் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இட நெருக்கடி அதிகரித்துள்ளதால் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தலைநகர் போர்ட் வில்லாவில் உள்ள விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. மீட்பு பணியில் ஐ.நா. போரிடர் உதவிகுழு ஈடுபட்டுள்ளது.
அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்றவையும் மீட்பு குழுக்களை அனுப்பியுள்ளன. நிதி உதவியையும் வழங்குவதாக உறுதி அளித்துள்ளன. ஐரோப்பிய யூனியனும், இங்கிலாந்து நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளன.
புயல் மழைக்கு 8 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் 44 பேர் இறந்ததாக அதிகார பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.