அணுசக்தி விவகாரத்தில் இந்த மாத இறுதிக்குள் ஒப்பந்தம் மேற்கொள்ள கெடு விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வரைவை அமெரிக்காவும், ஈரானும் தயாரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த வரைவு ஒப்பந்தத்தில், தன்னிடமுள்ள அணு ஆயுதம் தயாரிக்க உதவக் கூடிய கருவிகளில் 40 சதவீதத்தைக் குறைத்துக் கொள்ள ஈரான் ஒப்புக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பதிலுக்கு, ஈரான் மீது விதிக்கப்பட்டுள்ள சில பொருளாதாரத் தடைகளை விலக்கிக் கொள்ள அமெரிக்கா சம்மதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
யுரேனியம் செறிவூட்டிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது, இதுவரை நிகழ்ந்து வந்த பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சமாக இருந்து வந்தது. இந்த நிலையில், ஈரானில் தற்போது 10,000-ஆக உள்ள செறிவூட்டிகளின் எண்ணிக்கையை 6,000 வரை குறைக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
ஈரான் அணு ஆயுத பலம் பெறுவதைத் தடுப்பதற்காக, அந்த நாட்டின் மீது வல்லரசு நாடுகள் (ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 5 நிரந்தர உறுப்பு நாடுகளும், ஜெர்மனியும்) பொருளாதாரத் தடை விதித்தன. இதனால் ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.பொருளாதாரத் தடைகளை வல்லரசு நாடுகள் விலக்கிக் கொள்வதற்கான பேச்சுவார்த்தை கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. எனினும், இரு தரப்பினருக்கும் இடையே உடன்பாடு ஏற்படாமல் இழுபறி நீடித்து வந்தது.