சிங்கப்பூர் நாடு உருவாகக் காரணமானவரும் அந்நாட்டின் முதல் பிரதமருமான லீ குவான் யூ (91) திங்கள்கிழமை காலமானார்.
லீ குவான் யூ, 1959 முதல் 1990-ஆம் ஆண்டு வரை, 31 ஆண்டுகள் சிங்கப்பூர் பிரதமராகப் பதவி வகித்தார்.
அவரது தலைமையின் கீழ் சிங்கப்பூர் தனி நாடாக உருவானதோடு, செல்வம் கொழிக்கும் இடமாகவும் உயர்ந்தது.
அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் அரசு மருத்துவமனையான சிங்கப்பூர் தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், திங்கள்கிழமை அதிகாலையில் அவர் காலமானார்.
லீ குவான் யூவின் மனைவி 2010-இல் காலமானார். அவருக்கு இரு மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
அவரது மூத்த மகன் லீ சியன் லூங் தற்போது அந்நாட்டின் பிரதமராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
லீ குவான் யூவின் மறைவையடுத்து, அந்நாட்டில் ஒரு வார காலம் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்தது.
மார்ச் 25 முதல் 28-ஆம் தேதி வரை சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அவரது உடல் நாடாளுமன்ற வளாகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்படும். இறுதிச் சடங்கு மார்ச் 29-ஆம் தேதி நடைபெறும்.
1923-ஆம் ஆண்டு பிறந்த லீ, பிரிட்டனின் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி கற்றார். சிங்கப்பூரில் மக்கள் சக்திக் கட்சி எனும் கட்சியை உருவாக்கியவரில் லீ குவான் யூவும் ஒருவர். 1959-இல் இக்கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து, தற்போது வரை தொடர்ந்து ஆட்சியில் இருந்து வருகிறது.
1963-இல் பிரிட்டனிடமிருந்து விடுதலை பெற்று, மலேசியாவின் பகுதியாக இருந்த சிங்கப்பூர், 1965-இல் தனி நாடாக ஆனது.
முன்னதாக, 1959-இல், பிரிட்டன் முடியாட்சியின் கீழ் சிங்கப்பூர் இருந்தபோதே லீ அதன் பிரதமரானார்.
சீனர்கள், மலேயர்கள், இந்தியர்கள் எனப் பல பிரிவினர் வாழும் சிங்கப்பூரில் தமிழுக்கு ஆட்சி மொழி அந்தஸ்து வழங்கியவர் லீ ஆவார்.
இயற்கை வளம் எதுவுமில்லாத சின்னஞ்சிறிய தேசத்தைப் பொருளாதார வலு மிக்க மாபெரும் சக்தியாக அவர் மாற்றினார்.
1990-இல் பிரதமர் பதவியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதன் பிறகும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்த அவருக்கு, “அரசின் வழிகாட்டி அமைச்சர்’ என்ற சிறப்புப் பதவி அளிக்கப்பட்டது.
அவரது தலைமையின் கீழ் அந்நாடு மாபெரும் வளர்ச்சியைக் கண்டது.
நிதி, வர்த்தகத் துறையில் உலகின் முதன்மையான 4 நாடுகளில் ஒன்று; உலகின் முதன்மையான 5 துறைமுகங்களில் ஒன்று; தனிநபர் வருமானம் மிக்க உலக நாடுகளின் வரிசையில் 3-ஆவது இடம் எனப் பொருளாதார அளவில் சிங்கப்பூர் முக்கியத்துவம் பெற்றது.
அவரது மகனும் தற்போதைய பிரதமருமான லீ சியன் லூங், தொலைக்காட்சியில் நிகழ்த்திய அஞ்சலி உரையில் கூறியதாவது:
“சிங்கப்பூரின் விடுதலைக்காக லீ குவான் யூ போராடினார். நாடென இல்லாத ஓரிடத்தை மாபெரும் தேசமாக மாற்றிக் காட்டினார். நாம் சிங்கப்பூர் தேசத்தவர் எனப் பெருமிதம் கொள்ள வைத்தவர் அவர்’ என்றார்.
1